5 செப்டம்பர், 2011

மலையேறிக் கற்பிக்கும் ஆசிரியர்


பணக்காரத் திமிருடன், எங்கும் செல்வ செழிப்பாய் காட்சியளிக்கும் ஏற்காடு மலை பலநூறு பழங்குடி மக்கள் வாழும் கிராமங்கள் சூழ்ந்த சுற்றுலாத் தளம். உச்சி வெயிலுக்குப் பயந்து ஏற்காடு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு மத்தியில், சேலத்தில் இருந்து தினம் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரின் பயணம் 15 வருடமாக தொடர்கிறது. இதில் என்ன ஆச்சர்யம் என்று கேட்கிறிர்களா? தரையில் இருந்து பல கிலோ மீட்டருக்கு மேலே இருக்கும் வாழிடம் தான் ஏற்காடு.அங்கு செல்லும் அந்த ஆசிரியரின் பெயர் ரவிக்குமார். அவர் செய்யும் தொண்டு பழங்குடி இனப் பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடுவது.

ஒருநாள் பயணமாக அவரது பள்ளிக்குச் சென்றபோது, அந்த அடர்ந்தக் காட்டுப் பாதையில் எவ்வளவு முயன்றும் எட்டிப் பார்க்க முடியாமல் திணறியது சூரிய ஒளிக்கதிர்கள். அவ்வளவுப் பெரிய அடர்த்தியான மரங்கள் கைக்கோர்த்து, வரிசையாக நின்று புதியதாய் வருபவர்களை தன் கிளைகளை அசைத்து வெல்கம் சொல்வதுபோல் ஒருத் தோற்றத்தை ஏற்ப்படுத்தியது.

" ஏற்காடு மலையில் 67 கிராமங்கள் உள்ளன. அதில் நாகரீக உடைகள் எட்டிப் பார்க்காத கிராமங்களும் உண்டு. மின்சார விளக்குகள் கண் சிமிட்டாத கிராமங்களும் உண்டு. 1996 ம் ஆண்டு நான் அங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தது முதல், இன்றுவரை கடந்த 15 வருஷமாக பெண் கல்வியின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வோடு வலியுறுத்தி வருகிறேன். முதன் முதலாக இந்தப் பகுதியில் ஆசிரியராக வந்தபோது, இம்மக்களின் நிலையை உணர்ந்து கொண்டேன். இங்கு வருகைப் பதிவு என்பது மலைக்கும், மதுவுக்கும் உள்ள வித்யாசம் போல் தான் இருக்கும். 50 பேர் மாணவர்கள் என்றால் 15 பேர் தினம் வருவதே அதிசயம் தான். அதுவும் பெண் குழந்தைகள் வருகை மிகவும் குறைவு. என்ன காரணம் என்று ஒரு நாள் விசாரிக்கச் சென்றேன். இவர்களின் பெற்றோர்களுக்கு சொல்லிக் கொள்ளும்படி வேலை வாய்ப்புகளும் கிடையாது. அருகில் இருக்கும் காப்பி தோட்டத்திற்கு பெண் குழந்தைகளையும் குடும்ப வறுமையால் வேலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். இதைப் பார்த்த நான்,அவர்களிடம் படிப்பின்அவசியத்தை விளக்கிச் சொல்லி, விளக்கிச் சொல்லியே எனது ஆசிரியர் பணி சமுதாயப் பணியாக மாறிவிட்டது போல் பிம்பம். ஆரம்பத்தில் இருந்து ஒத்துழைப்பு என்பது, எனக்கு இல்லாமல் போய் விட்டது. எனக்கு ஏன் என்று நானும் இருந்து விடவில்லை. முயற்ச்சியில் இருந்தும் பின்வாங்கவில்லை. பல நாள் வீட்டிற்கு செல்லாமல், இங்கேயே தங்கி இருந்து அதிகாலையில்  அந்த பெண் குழந்தைகளின் வீட்டிற்கு சென்று பெண்களில் சாதித்தவர்களின் கதைகளை கூறி பெற்றோரின் மனதை மாற்றுவேன். அதற்கு பலன் மெல்ல, மெல்ல கிடைக்க ஆரம்பித்தது. இதுபோல் ஏற்காட்டில் உள்ள பல கிராமங்களில் பெண் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, பேரணிகள் பல நடத்திக் காட்டினேன், அது இன்றும் தொடர்கிறது. இங்குள்ள கிராமங்களில் படிக்கும் வயதுள்ள ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் பள்ளிக்கு வரும்வரை எனது இந்த பயணம் தொடரும். இப்பகுதியில் உள்ள பெற்றோர்களையும் குற்றம் சொல்ல முடியாது. அரசாங்கத்தின் உதவிக் கரங்கள் நீளுவதே கிடையாது. அடிப்படை வசதிகள் இல்லாத் பல கிராமங்கள் இங்குண்டு. அன்றாடப் பிழைப்புக்கே அல்லாடும் மக்கள் ஏராளம்.

படத்தின் முழு அளவைப் பார்க்க அதன் மேல் சொடுக்கவும்
 

2009 ம் ஆண்டு ஏற்காட்டில் உள்ள வெள்ளக்கடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றேன். வெள்ளக்கடை பஞ்சாயத்து, செம்மனத்தம் பஞ்சாயத்து, மஞ்சக்குட்டைப் பஞ்சாயத்து என மூன்று பஞ்சாயத்துகளிலும் மொத்தம் 12 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். அனைவருமே எஸ்டி வகுப்பை சேர்ந்தவர்கள். இவர்களின் குழந்தைகள் எங்கள் பள்ளியில் தான் படிக்க வேண்டும்.

ஆனால் 8 ம் வகுப்பு வரை மட்டுமே இருந்ததால், உயர்நிலை, மேல்நிலை வகுப்பு படிக்க 12 கிமீ தொலைவில் உள்ள ஏற்காட்டிற்கு செல்ல வேண்டும். இதனால் பெற்றோர்கள் சிரமப்பட்டு பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது என நினைத்து பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார்கள். சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்மேகம் அவர்களை சந்தித்து, இங்கு உயர்நிலைப் பள்ளி வர மக்களுடன் சேர்ந்து போராடி நடுநிலைப் பள்ளியாக இருந்ததை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்திக் காட்டினேன். இந்த செயலால் தற்போது அனைத்து பெண் குழந்தைகளும் படிக்க வருகிறார்கள். இடைநிற்றலே இங்கு கிடையாது என்று பெருமையுடன் நம்மிடம் பேசினார் ரவிக்குமார்.

ஏற்காட்டில் பழங்குடி இன மாணவியான அகிலாண்டிஸ்வரி என்ற சிறுமி பள்ளிச் செல்லாமல் தன் வீட்டிலே இருந்தார். இதைப் பற்றிக் கேள்விப்பட்ட ரவிக்குமார் அந்த சிறுமியின் பெற்றோருக்கு பெண் கல்வியின் அவசியத்தை புரியவைத்து பள்ளியில் சேர்த்தார். இவரது கண்டுபிடிப்பான அந்த சிறுமி நாளடைவில் நன்கு படித்து வகுப்பிலேயே நன்றாக படிக்கும் மாணவியாக உருமாறினார். அதுமட்டுமில்லாமல் தேசிய நுண்ணறிவுத் தேர்வை எழுதி, அந்த மாணவி பாஸ் செய்தார். அதனால் ஏற்காட்டில் உள்ள 67 கிராமங்களிருந்து தேர்வான முதல் மாணவி, ஒரே மாணவி என்ற சிறப்பு அகிலாண்டிஸ்வரிக்கு கிடைத்தது. தேசிய நுண்ணறி தேர்வில் பாஸ் செய்ததால் தற்போது சேலம் மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் அந்த மாணவி படித்து வருகிறார். அவருக்கு ஐஏஎஸ் அல்லது ஐபிஸ் படிக்க ஆகும் செலவு அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்பது கூடுதல் சிறப்பு. படிக்காமல் வீட்டில் இருந்த சிறுமியை பள்ளியில் கொண்டு வந்து சேர்த்து, அந்த மாணவியை சாதிக்க வைத்த பெருமை ஆசிரியர் ரவிக்குமாருக்கே சேரும். இந்த நிகழ்ச்சியினால் ஏற்காட்டில் ரவிக்குமார் படு பிரபலம். எங்கள் ஆசிரியர் என்று ரவிக்குமாரை பெற்றோர்களும், மாணவர்களும், நடைபாதைக் கடை வைத்திருக்கும் வியாபாரிகளும் உரிமைக் கொண்டாடுகிறார்கள். அங்குள்ள ஒவ்வொரு வீட்டிற்கு முன்பும் ரவிக்குமாரின் காலடித் தடம் பதிந்திருக்கிறது.

பெண் கல்விக்காக இவரது சேவை நகரத்தில் இருப்பவர்களுக்கு ரொம்ப சாதாரணமாகத் தெரியும். ஒருமுறை இந்த பழங்குடி இன மக்கள் வாழும் கிராமத்திற்கு சென்றுப் பாருங்கள். ஏற்காடு உங்களுக்கு சுற்றுலாத் தளமாகத் தெரியாது. சோகங்கள் நிறைந்த கதை சொல்லும் தளமாகத் தெரியும். பழங்குடி இன மாணவர்களுக்கு உலக அறிவியல் பற்றியும், புவியியல் கூறுகள் பற்றியும், உலக வரலாறும் தெரிய வேண்டும் என்பதற்காக போராடி வரும் ரவிக்குமார், இக்கிராமங்களில் வசிக்கும் மக்களுகாக பல்வேறு மருத்துவ முகாம்களையும்,விழிப்புணர்வுகளையும் செய்து வருகிறார்.

 அவரைப் பலத்தொண்டு நிறுவங்கள் பின் தொடர்ந்தால் ஏற்காடு பழங்குடி இன மக்களின் கல்வித்தரம் உயரும். ஒரு நல்ல ஆசிரியர் தான் நாளைய சமுதாயத்தின் நம்பிக்கை தூண் அதில் ரவிக்குமாருக்கு நிச்சயம் இடமுண்டு.
இல்லாத வீட்டில் குடியிருக்காது சாமி. பெண்கள் கல்லாத வீட்டில் இருக்காது சமுதாய முன்னேற்றம். அன்று கல்லாத மக்கள் கள்ளிப் பாலைக் கொடுத்து கொன்றார்கள். இன்று பெண் குழந்தைகளுக்கு கல்விப் பாலைக் கொடுத்து முன்னேற்றி வருகிறார் ஆசிரியர் ரவிக்குமார்!

வாழ்த்துக்கள்

ஆசிரியர் ரவிக்குமாருக்கு வாழ்த்து தெரிவிக்க  9790230438

அன்புடன்
சர்பனா

7 கருத்துகள்:

  1. அருமையான கட்டுரை. ஆசிரியரின் பனி தொடர வாழ்த்துகிறேன். இதே போல் பெண் ஆசிரியை ஒருவர் கேரளாவில் பனி செய்வதை பத்திரிக்கையில் படித்த நினைவு.

    பதிலளிநீக்கு
  2. நல்லதோர் செய்தி... என்னை மேன்மேலும் உற்சாகப் படுத்துகின்றது... ஆசிரியர் தினத்தன்று திரு. ரவிக்குமார் ஆசிரியர் அவர்களை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்... அதே நேரத்தில் சகோதரி வினியின் பணியும் சிறப்படைய வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. அருமை,
    இனிமேல் ஆவது அவர்களுக்கு விடியல் பிறக்கட்டும்..


    உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. நம்மை உருவாக்கி உலகிர்களித்தவர்களுள் ஒருவர் பற்றிய அருமையான பதிவு..

    பதிலளிநீக்கு
  5. மிக்கநன்றி தோழி வினிசர்பனா.....
    கல்வி கற்பிக்க ஒரு ஆசிரியர் அவர் பனியாக மட்டும் பார்க்கமல் அதற்கும் மேலாக சிறந்த மனிதராக வாழ்வதை உலகுற்கு அறிய வைத்தற்கு...

    திரு. ரவிக்குமார் ஆசிரியர் அவர்களை வணங்குகிறேன் .... உங்கள் உடல், உள்ளம் திறனுடன் இருக்க இறைவனிடம் வேண்டுகிறேன் ...... வளர்க உங்கள் புகழ் ..

    பதிலளிநீக்கு
  6. இறைவனுக்கு நன்றி................
    இறைவடிவுடைய ஆசிரியருக்கு நன்றி..........
    மிகச் சிறந்த பதிப்பு...............
    நன்றி...................

    பதிலளிநீக்கு