27 நவம்பர், 2011

மயக்கம் என்ன - புகைப்பட மயக்கம்

தன்னுடைய ஒவ்வொருப் படத்திலும் ரசிகர்களின் கண்களைக் குளமாக்கும், செல்வராகவனுக்கு முதலில் வாழ்த்துக்கள். ஏன்னா, 'மயக்கம் என்ன" படத்தை நெகட்டிவாக முடிக்காமால்  உணர்ச்சிபூர்வமாக நெகிழ்ச்சியோடு முடிய வைத்ததற்கு!!

மொக்கை பீஸைக் கூட அழகான தேவதைகளாக காட்டும் புகைப்படகாரர்களின், இரவுப் பகல் தாண்டிய உழைப்பையும், போராட்டங்களையும், பாதிப்புக்களையும் சொல்வது தான் மயக்கம் என்ன. ஆனால் புகைப்படக்காரனின் வலிகளை சரியாகச் சொல்லாமல், தொட்டுக் கொள்ள ஊறுகாய் போல் காட்டிவிட்டு, படம் முழுக்க காமத்தையும், காதலையுமே சொல்லி இருப்பது அலுப்பை ஏற்ப்படுத்துகிறது.

இரும்புப் புடிச்சக் கையும், சொரங்குப் புடிச்சக் கையும் சும்மாவே இருக்காது. அதுப் போலத்தான் எந்நேரமும் கேமராக் கையோடவே அலையும் தனுஷ், வித விதமான போட்டோக்கள் எடுத்து தன்னை நேச்சுரல் புகைப்படக்காரராக சேர்த்துக் கொள்ளும்படி பெரியப், பெரிய நிறுவனங்களாக ஏறி இறங்குகிறார். அது மாதிரி,ஒரு நிறுவனத்திற்கு வேலைக் கேட்டுச் செல்லும்போது, தனுஷ் எடுத்த போட்டோக்களை தான் எடுத்ததாக கூறி, உலக புகழ்ப் பெறுகிறார் பிரபலமாக இருக்கும் போட்டோகிராபர் ரவிசங்கர். தான் ஏமாற்றப் பட்டத்தை அறிந்த தனுஷ், அதன் பிறகு எடுக்கும் கிறுக்கலான முடிவுகளே மயக்கம் என்ன. செல்வராகவன் படத்துக்கே உரிய காதல், காமம், காமெடி, துரோகம் எல்லாத்தையும் காட்டியிருக்காகாங்க.

சில இடங்களில் தனுஷின் நடிப்பு யதார்த்தமாகவும், சில காட்சிகளில் நடிப்பே வராமல் திண்டாடி இருப்பதும் அப்பட்டமாக தெரிகிறது. பாடல்களைத் தவிர படம் முழுக்க தனுஷ் முகத்தை பார்க்கவே சகிக்கல. எந்நேரமும் வெறுப்புடன்  சோர்வாக காட்டி படம் பார்ப்பவர்களையும் வெறுப்பேற்றுகிறார்கள். காஸ்டியூமிலும், முகத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.


காதல் என்பது ஒருமுறை தான் வரும், ஒருத்தவங்க மேல தான் வரும்.ஒரு தடவை மட்டும் தான்  பூக்கும் என்ற விஜய் படம்,விக்கரமன் பட டயலாக் எல்லாத்தையும் உடைச்சி, காதல் அழகானது. எத்தனை முறை வேணாலும் வரலாம், பிடிச்சி இருந்தால் யார் மேலும் வரலாம், எந்த சூழ்நிலையிலும் வரலாம் என்று இப்படம் மூலம் யதார்த்த உண்மையை சொன்ன செல்வராகவனை நிச்சயமாகப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

தனுஷின் நண்பனின் காதலியாக வந்து, பின்னர் தனுஷையே காதலித்து திருமணம் செய்யும் ஹீரோயின் ரிச்சா முன் பாதியில் வெறும் காமப் பொம்மையா வந்து, பின் பாதியில் தன்னுடைய நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்து பின்னி எடுத்திருக்காங்க. ரிச்சா நடிக்கத் தெரிந்த சிறந்த நடிகை என்று, அவங்க முகப் பாவனைகளே சொல்லாமல் சொல்கிறது. தன்னுடைய பட ஹீரோயின்களை  எப்பொழுதும் காமப் பார்வையோடு கண்ணை உருட்டி பார்த்து, சோகமாக காட்டுவதுப் போலவே ரிச்சாவையும் படம் முழுக்க சோகமாவே காட்டி இருக்காரு செல்வராகவன். மொக்கையா இருக்குற பெண்களையும் பேரழகியா காட்டுவது கெளதம் மேனன் ஸ்டைல். பேரழகியையும் மொக்கை பீஸா, அழு மூஞ்சியாக் காட்டுவது செல்வராகவன் ஸ்டைல்.


படத்தோட நிஜ ஹீரோ ஒளிப்பதிவாளர் ராம்ஜி தான். கண்களிடமும்,கேமராவிடமும் வேலை வாங்கத் தெரிந்தவன்  தான் சிறந்த ஒளிப்பதிவாளன். தன்னை சிறந்த ஒளிப்பதிவாளர் என்று நிருபிச்சிருக்காரு ராம்ஜி. சிறுப்  புல்லும், ஒற்றைப் பனித்துளியையும் புகைப்படக்காரர்கள் கொண்டாடும்  இயற்கையின் வரப் பிரசாதங்கள். இயற்கையின் அழகையும், அவற்றின் உயிர்த் துடிப்புக்களான பறவைகளையும், அதிசய விலங்குகளையும் படத்தின் இடையிடையே ,அழகாகக்  காட்டி நம்மை பிரமிக்க வைத்துள்ளார்.

படத்தின் பெரிய பலம் பாடல்களும், பின்னணி இசையும் தான்.ஜி.வி பிரகாஷ் பின்னி எடுத்திருக்காரு. பொதுவாக படம் வெளியாவதற்கு முன் பாடல் ஹிட் ஆகிவிட்டால், பாடல் படத்தில் எப்படி இருக்குமோ என்று பெரிய எதிர்ப்பாபோடு, அதற்காகவே போய்ப் படம் பார்ப்போம். ஆனால் பலப் பாடல்களின் காட்சியமைப்புகள் சம்மந்தமே இல்லாமல்,நம் எதிர்ப்பார்ப்பை பொய்யாக்கி ஏமாற்றத்தை கொடுக்கும். ஆனால் இந்தப் படத்தில் வோட, வோட பாடல் காட்சியமைப்பு சான்சே இல்லை. நாம் எதிர்ப்பார்த்ததை விட 100 மடங்கு சூப்பரோ, சூப்பர். எத்தனை முறை வேணாலும் பார்க்க வைத்து கண்களுக்கு விருந்தளிக்கிறது. மயக்கம் என்ன  படம் வெளியாவதற்கு முன் இளைஞர்கள் மத்தியில் இது, ஒருக் காதல் தோல்விப் படம் என்று உணரவைத்தது "காதல் என் காதல், அது கண்ணீருல" பாடல். இந்தப் பாட்டு அந்தப் படத்துக்கு தேவையே இல்லாதப் பாட்டு. தேவையான இடத்துலும் இந்தப் பாட்டை வைக்கல.வேஸ்ட். "நான் சொன்னதும் மழை வந்துச்சாப்' பாட்டு இந்த மழைநாளில் கேட்டுக் கொண்டே மழையை ரசிக்கும் ரகம்.

பெண் என்பவள் நேரில் வாழும் கடவுள் என்று காலம் எவ்வளவு முன்னேறினாலும், எந்த இயக்குனர்களும் காட்ட முன்வருவதில்லை, ஏன்னா, படம் ஓடாது, பசங்களுக்கு பிடிக்காது என்கிற மாயை. இதை அப்படியே செஞ்சிருக்காரு செல்வராகவன். போதைப் பொருளாகவே சித்தரித்து, தன்னுடைய அருவருக்கத்தக்க வசனங்களால், தகாத வார்த்தைகளால் திட்டியும், வெட்றா அவள, குத்துடா அவள என்று பாடலையும் வைத்து பெண்களை இழிவுப் படுத்திருக்கார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்நிலை மாற்றப்பட வேண்டும். 


வியட்நாம் போரின்போது தீப்புண் காயம்பட்டு அழுதுகொண்டே நிர்வாணமாக
  ஓடிவந்த சிறுமியை நிட் உக் என்ற புகைப்படக்காரர் வெளியுலகத்திற்கு படம் எடுத்துக் காட்டியதால் தான், மக்களுக்குப் போரின் மீது  கசப்புணர்வும், விழிப்புணர்வும் ஏற்ப்பட்டது. சூடான் நாட்டில்  ஒரு குழந்தை எலும்புகள் தெரிய இருப்பதையும், அந்தக் குழந்தையை கழுகு ஒன்று தின்னக் காத்திருப்பதையும் படமாக எடுத்தப் புகைப்படக்காரர் கெவின் கார்ட்டர் மூலம் தான் ஆப்பிரிக்கக் கண்டத்தின் வறுமை பெரிதளவில் மக்களிடையேயும், உலக நாடுகளாலும் பேசப்பட்டது.புகைப்படக்காரர்களால் அனைத்தையும் வெளிக்கொணர முடியும். ஆனால் புகைப்படம் பற்றிக் கதையமைத்துவிட்டு, அதுப் பற்றி அழுத்தமான காட்சிகளைப் பதிவு செய்யாமல், சம்மந்தமில்லாத திடீர், திடிரென  வரும்  காட்சியமைப்புகள் படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

மாடியிலிருந்து கீழே விழுந்தால் நிச்சயம் இறப்பார்கள், இல்லையென்றால் அடிப்படும். ஆனால், தான் ஏமாற்றப்பட்ட அதிர்ச்சியினால் அவ்வளவுப் பெரிய   மாடியிலிருந்து கீழே விழுந்த தனுஷ் அடியேதும் படாமல் இருப்பது லாஜிக் மீறல். படம் முழுக்க சாக்கடைப் போன்ற டபுள் மீனிங் வசனங்களால் காது கொடுத்து கேட்க முடிவதில்லை. படத்துல மதுப் பாட்டில்கள் தான் நம்மக்கூட பயணம் செய்யுது. எல்லா இடத்திலும் வர மது தான், படம் பார்க்கும் ஆண்களின் கவனத்தை ஈர்க்கும்.

இரவை மணிரத்தினத்திற்கு அடுத்து அழகா காட்டத் தெரியும் கலை செல்வராகவனுக்கு மட்டும் தான் தெரியும் போல. இரவையும், தனிமையும் அழகாக் காட்டி இருக்காரு. மொத்ததுல இந்தப் படம் புகைப்படத் துறையில் ஆர்வம் இருப்பவர்களுக்கு, ஒரு சின்ன டானிக் குடிச்ச சந்தோசம் மாதிரி தான். பெண்களை இழிவுப் படுத்துற வசனங்கள் இருப்பதால் ஆண்களுக்கும் மயக்கம் என்ன  பிடிக்கும். ஆனால் பெண்களுக்கு? செல்வராகவனின் அடுத்தப் படத்திற்கு போனால், நிச்சயமாக நான் பஞ்சு எடுத்துட்டுப் போவேன்.

மொத்தத்தில் மயக்கம் என்ன - புகைப்பட மயக்கம்