10 செப்டம்பர், 2011

வலை வீசம்மா... வலை வீசு !!!


அது மீனவ கிராமமல்ல.... ஆனால், ஒவொரு வீட்டின் முன்பும் மீன் பிடிக்கும் வலைகள் விரித்து வைக்கப்பட்டு உலர்ந்து கொண்டிருந்தன. சுவர்களில் சாய்த்து வைக்கப்படிருந்த படகுத் துடுப்புகள்
கம்பீரமாக நின்றுகொண்டிருந்தன. அது,கடலூர் மாவட்டம் பிசாவரத்தை சார்ந்த எம்.ஜி.ஆர் நகர். இங்கு சுமார் 150 குடும்பங்கள் வசிக்கின்றன. அனைவரும் இருளர் இன மக்கள்.


 
படத்தின் முழு அளவைப் பார்க்க அதன் மேல் சொடுக்கவும்

இந்த இனத்தை சேர்ந்தவர்கள் காட்டெலி,முயல்,உடும்பு பிடிப்பதையே தொழிலாகச் செய்து வந்தார்கள். ஆனால், அதில் பெரியதாக வருமானம் இல்லை. விற்கும் விலைவாசியில் எதையும் வாங்கும் அளவிற்கு இவர்களிடம் பொருளாதாரமும் இல்லை. அதனால் இவர்கள் தேர்ந்தெடுத்த தொழில் மீன் பிடித்தல். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் படகில் மீன் பிடிக்கச் செல்பவர்கள் ஆண்களல்ல, பெண்கள்.

இவ்வூர் பெண்கள் இரவுப், பகல் பார்க்காமல் தன்னம்பிக்கை என்னும் துடுப்பைப் போட்டு படகு ஓட்டி  பிச்சாவரத்தில் உள்ள ஆற்றில் மீன் பிடிக்கச் செல்கிறார்கள். தமிழகத்தில் இதுபோல் வேறெங்கும் பெண்கள் தனியாக ஆற்றில் மீன்பிடிக்கச்  செல்வதில்லை.
 
பக்கத்து கிராமங்களில் இருக்கும் எல்லா மக்களுக்கும் இங்கு வசிக்கும் பெண்கள் ஓர் பேரதிசயம், காரணம் அனைத்து பெண்களும் ஆண்களின் துணை இல்லாமல், ஆற்றில் துடுப்பு போட்டு வலைவீசி மழை, வெயில் தாண்டிய அவர்களது உழைப்பால் நிமிர்ந்து நிற்கின்றனர். ஆனால் இவர்கள் மீனவர்கள் இல்லை, வறுமை இப்பெண்களை அந்த வாழ்க்கைக்கு கொண்டுச் சென்றுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் வறுமை தாண்டிய நிலையான எதிர்பார்ப்பு, எங்கு கிடைக்கும் மீன், மீன், மீன் !!!!!!!


இந்தப் பெண்களை பார்க்கும்போது பூங்குழலி பெயர் ஞாபகம் வருகிறது. யாரெண்டு கேட்காதிர்கள். பூங்குழலி என்ற பெயர் உண்மையோ, பொய்யோ "பொன்னியின் செல்வன்" படித்த அனைவருக்கும் ராஜ, ராஜசோழன், வந்தியத்தேவன் உட்பட வாசகர்களுக்குள் அவள் தான் கடலில் வழிகாட்டி. அவள் ஒரு மீனவப் பெண். பூங்குழலி தான் மறு உருவம் எடுத்து படகில் அமர்ந்து இருப்பது போல் ஒருத் தோற்றம் இருந்தது இந்த பெண்களைப் பார்த்தபோது.


அந்த பெண்களுடன் ஒருப் படகில் ஏறிக் கொண்டபோதுஇரண்டு, இரண்டுப் பேராக படகை நகர்த்திக் கொண்டு தண்ணீரில் இறங்குகிறார்கள். படகில் ஏறி அமர்ந்து துடுப்பைப் போடும் வேகத்தில் பூச்சரம் தொடுக்கும் கைகளில் புயல் வேகம் தெரிந்தது. ஆற்றில் பாதி தூரம் சென்றதும் ஒவ்வொரு படகிலும் உள்ள பெண்கள் நீண்ட வலைகளை எடுத்து தண்ணீரில் விசிறி எறிகிறார்கள். தண்ணீருக்குள் விரிந்து மூழ்கி மறையும் வலை, சற்று நேரத்தில் பல நூறு மீன்களுடன் வலை படகுக்குள் இழுத்துப் போடப்படுகிறது. அனைவரது முகத்திலும் தன் உழைப்புக்கான ஊதியம் கிடைக்கப்போகிறது என மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வலையில் சிக்கிய மீன்களைப் பார்த்தபோது. எத்தனை தன்னம்பிக்கை வறுமையை வெல்லவேண்டும் என்ற வைராக்கியம்!!

படத்தின் முழு அளவைப் பார்க்க அதன் மேல் சொடுக்கவும்

"அவர்களின்  வாயிலிருந்து வந்த அவர்களை பற்றிய வாழ்வியல் கதை இதோ;

"
இந்த மீன்பிடித் தொழிலை நாங்க 2 வருசமா செய்துகொண்டு வருகிறோம். எங்க வீட்டு ஆம்பிள்ளைங்க அவர்களுக்கு என்ன வேலை செய்யத் தோணுதோ அந்த வேலைக்கு போய்டுவாங்க. மாசத்துல நாலு நாளைக்கு மட்டும் தான் வேர்கடலை போடுற வேலை கிடைக்கும். அத விட்டா வேற பொழப்பு எங்களுக்குக் கிடையாது. தினமும் ஏதாவது ஒரு வேளை பட்டினியாகத்தான் இருப்போம். எங்க வயிற்றுப் பசியையும், பிள்ளைகளின் பசியையும் அந்த வேலையை வைத்து தீர்க்க முடியல. அதானால் தான் வறுமைக்கு ஒரு முடிவு கட்ட  எல்லா பெண்களும் சேர்ந்து, இயற்கை அன்னையால் பரந்து விரிந்துள்ள பிச்சாவரம் ஆற்றில் மீன் பிடிக்காலம் எனத்  தீர்மானித்தோம் என்று தாங்கள் மீன் பிடிக்க வந்ததான் பின்னணியை சோகத்துடன் கூறுகிறார் பரமேஸ்வரி என்கிற பெண்.
 
இந்த பெண்களின் வாழ்க்கையில் ஒரு ஒதுக்கி வைக்கப்படும் பொருளாதார பின்னணி இருக்கிறது. இருளர் இன ஆண்கள் என்ன தொழில் செய்யவேண்டும் என்பதை சமுதாயம் நிர்ணயித்து கொடுத்திருகிறது. காட்டெலி பிடிப்பது, முயல், உடும்பு பிடிப்பது தான் அவர்களின் தொழில். இதில் என்ன வருமானம் இருக்கும். உலகம் ஜாதி, மதம் கடந்து ஒரு விற்பனை உருண்டையாக மாறிவிட்டது. விலை பேசி வாங்கும் அளவிற்கு இந்த மக்களிடம் வருமானம் இல்லை.

"
என் புருஷன் இறந்ததால் என்னையும், பிள்ளைகளையும் காப்பாற்றிக் கொள்ள வேறு வழித் தெரியல. எங்களுக்கு இது பழக்கமில்லாத வேலை தான். ஆனால், உயிர் வாழணுமே. அதனால பழகிக்கிட்டோம். வலையை தூக்கி வீசும்போதும், மீன்களோடு வலையை தூக்கும்போதும் இது ஆண்களுக்கு மட்டுமே ஆன தொழில் என்பதை உணர்ந்தாலும், பழகப் பழக எந்த கஷ்டமும் தெரியவில்லை. புதுசா ஆத்துல போய் மீன் பிடிக்கும்போது ரொம்ப சிரமமாகத்தான் இருந்தது. எங்களின் தன்னம்பிக்கையால் முடியும்னு நம்பிக்கை வைத்தோம், அது வீண் போகல. சில நேரம் 500 ரூபாய் விற்குற வரைக்கும் மீன் கிடக்கும், அதுவே வெறும் வலையோடவும் ஒண்ணுமே கிடைக்காம திரும்பியும் வந்திருக்கோம். பல முறை வலைகளில் பாம்பும் கிடைச்சிருக்கு. மீன் கிடைக்கலனா 4 அடி இருக்குற ஆத்துல இறங்கி மூழ்கி இங்க இருக்குற காடுகளின் வேர்களை பிடித்து உலுக்குவோம் அப்போதுதான் மீன்கள் கலைந்து வலையில் மாட்டும். ஒவ்வொரு முறையும் இப்படி பண்ணும்போது உயிரை பணயம் வைத்து தான் செய்கிறோம். ஏனென்றால் ஆழமும் இருக்கும். பாம்பு, நீச்சல் அடிப்பது போன்ற சவாலான விஷயங்கள் இருக்கின்றன, சென்னையை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் தான் எங்களின் ஏழ்மை நிலையை பார்த்து இரண்டு குடும்பத்திற்கு ஒரு படகு என வாங்கிக் கொடுத்தது. இந்த படகையும், என் இரண்டு கைகளையும் தான் கடவுளா நினைக்குறேன் என்று கண்கள் விரிய வளர்மதி என்ற பெண் நம்மிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே அவரது கால் விரலை ஒரு நண்டு கவ்விக் கொள்கிறது.
படத்தின் முழு அளவைப் பார்க்க அதன் மேல் சொடுக்கவும்

இந்த தன்னம்பிக்கை பெண்கள் காலை 5 மணிக்கே சாப்பாடு கட்டிக்கொண்டு ஆற்றில் மீன்பிடிக்கச் சென்று மாலை 4 மணிக்கு திரும்புகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இரவு 7 மணிக்கு படகேறி விடியகாலை 3 மணிக்கு மீன்பிடித்துக் கொண்டு கரைச் சேர்கிறார்கள். இரவுப், பகல் பார்க்காமல் ஆற்றிலேயே இருக்கும் இவர்களின் மனதில் துளியளவும் பயமில்லை. முகத்திலும் அதை காணமுடிவதில்லை. தினமும்   8 கிலோ மீட்டருக்கு மேல் மீன்பிடிக்கச் செல்லும் இந்த பெண்களுக்கு    மோட்டார் படகு வாங்க வசதி இல்லாததால் கடலுக்குச் செல்வதில்லை.

"
முன்னாடி எல்லாம் மழை வந்தால் நாங்கள் அதிலும் பயமில்லாமல் படகு ஓட்டுவோம். கொஞ்ச நாளைக்கு முன் மீன் பிடிக்கப்போன எங்க சமூகத்தை சேர்ந்த ஒருவர் மழை வரும்போதே படகு ஓட்டியதால் இடித் தாக்கி இறந்துவிட்டார். அதனால் ஆற்றில் இருக்கும்போது  மழை வந்ததால் விடும்வரை படகிலேயே கூடாரம் போட்டு விட்டப் பிறகுதான் அங்கிருந்து கிளம்புவோம். காற்று அடிக்கும்போது வலையை வீசமுடியாது. மழையும், காற்றும் மாறி மாறி வந்தால் எங்கள் வயிறு தான் காய்ந்து போகும். அது வரை எங்காவது கடன் வாங்கியும், வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்தும் பிழைப்பை ஓட்டுவோம். ஆற்றில் இறால், சங்கரா மீன், நண்டு, வாளை மீன், கெளித்தி மீன் போன்ற பல வகைகள கிடைக்கும். அதில் கெளித்தி மீன் கடித்து பல முறை விழம் ஏறியுள்ளது. ஆற்றில் கிடக்கும் கூர்மையான ஆழிகள் பலமுறை கால்களை பதம் பார்த்துள்ளது. இதை எல்லாம் தாங்கிக்கொண்டு தான்  வயிற்றை நிரப்ப ஆற்றுடன் போராடுகிறோம். ரொம்ப நேரம் உட்கார்ந்து கொண்டு துடுப்பு போடுவதால் தொள்ப்பட்டையும், விளா எலும்பும் வலிக்கும். இது எல்லாம் கொஞ்ச நேரம் தான் மீனை பார்த்தவுடன் வலியெல்லாம் பறந்து போய்டும் என்று கூறிக்கொண்டே மீன் கடித்து விழம் ஏறிய தன்  கைகளை நம்மிடம் காட்டுகிறார் முனியம்மா.
 
இந்த ஊரை சேர்ந்த சுரேஷ் நம்மிடம் பேசும்போது ;
 
எங்க சமூக ஆண்களுக்கு மாசத்துல எப்பவாவது வாய்க்கால் வெட்டுற வேலை கிடைக்கும் அதுக்கு போய்டுவோம். மீதி நேரமெல்லாம் எங்கள் மனைவிகள் ஆற்றிலிருந்து கொண்டுவரும் மீனை அருகில் இருக்கும் கிராமங்களுக்கு விற்று வருவோம். அது தான் எங்களுக்கு நிரந்தர வருமானம். மனைவிக்கு உடம்பு சரி இல்லனாத்தான் நாங்க மீன் பிடிக்கப்போவோம். இத்தனை நாளா ஆற்றுக்குப் போற என் மனைவி ஒரு நாள் கூட இந்த வேலை கஷ்டமா இருக்கு எனக்கு பிடிக்கலன்னு சொன்னது கிடையாது என்று  பெருமையுடன்  கூறுகிறார்.தன்னம்பிக்கையால் துடுப்பை போட்டு இந்த பெண்கள் பிடிக்கும் மீன்கள் இன்று பல மாவட்டங்களுக்கு செல்கிறது. இந்த சமூகத்தில் வாழும் பாதி மக்களுக்கு ரேஷன் கார்டுகள் கூட அரசு கொடுக்கவில்லை. ஏதாவது தொழில் செய்யலாம் என்று மானிய லோன் கேட்டால் கூட யாரும் கண்டுகொள்வதில்லை. 100 நாள் வேலைத்திட்டமும் தருவதில்லை.வாழ்க்கையில் நிரந்தரம் இல்லாதது எதையுமே மனிதன் சம்பாதித்து விடுகிறான். ஆனால் தன்னை வெல்வதில் தான் தோற்றுப் போகிறான். இந்த பெண்கள் அனைவரும் தங்களை வென்றவர்கள் அதானல் இவர்களிடம் வறுமை அடிப்பட்டுப் போகிறது. ஆண்களே மீன்பிடிக்கச் செல்லத் தயங்கும் இந்த காலத்தில் துணிச்சலாக செல்லும் இந்த பெண்களுக்கு சபாஷ் போடலாம்.


படத்தின் முழு அளவைப் பார்க்க அதன் மேல் சொடுக்கவும்

அன்புடன்
வினி சர்பனா.

6 கருத்துகள்:

  1. இப்படியும் ஒரு இனப்பெண்கள் வாழ்ந்துவருவது ஆச்சரியமளிப்பதாக உள்ளது, பகிர்தலுக்கு நன்றி... உங்கள் பதிவை திரட்டிகளில் இணைக்கவும்...

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. நல்லா எழுதியிருக்கீங்க வினி!ஒரு சாண் வயிற்றுக்காக தன்னந்தனியே கடலுக்கு சென்று வரும் பெண்களின் உழைப்பை பற்றி எழுதியதில் உங்களின் உழைப்பு தெரிகிறது!

    பதிலளிநீக்கு
  4. அருமையான் பதிவு. பெண்கள் எப்போதும் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை மீண்டும் நிரூபிக்கும் பதிவு.பெண்கள் எப்போது சுய மரியாதையோடும் சுய சார்போடும் இருக்கிறார்களோ அந்த நாடு தான் முன்னேறும். அந்த வகையில் நம் கொஞ்சம் மாறி வருவது மனதுக்கு நெகிழ்வான விசயம். தோழமையுடன்.

    பதிலளிநீக்கு
  5. அருமையான பதிவு...தெரியாத பல விசயங்களை பதிவிட்டதற்க்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  6. good job vini.your Tamil accent make me impressed so much.voice of this people are recorded through you job.apart from recording for news do the things favor for them reporting to the corresponding officials. again wish you a good job

    பதிலளிநீக்கு