30 செப்டம்பர், 2011

"வாகை சூட வா" திரை விமர்சனம்

ஒவ்வொரு செங்கற்களாய் சேர்த்து ரசித்துக் கட்டப்பட்ட வீடு போலத்தான் உள்ளது "வாகை சூட வா" திரைப்படம். நிச்சயமாக அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது. எங்கோ நடந்து முடிந்த ஒருப் பதிவை நமக்குப் படம் பிடித்துக் காட்டி, நம் மனதை களவாடிய களவாணி இயக்குனரின் அடுத்த பிரமிப்பு தான் "வாகை சூட வா".



"இளமையில் கல், அது செங்கல் சூளையின் கல் அல்ல" என்ற ஒரு நல்ல கருத்தைக் மொத்த டீமும் பதிவு செய்துள்ளனர். இப்படம் ஒரு பீரியட் படம் என்பதால் பார்த்துப், பார்த்து அழகான காவியமாக ரசிக்கும்படி செதுக்கியுள்ளார்கள். படத்தின் கதைக்கான களம் இதுவரை தமிழ் சினிமா இயக்குனர்கள் கை வைக்காத செங்கல் சூளையில் வாழும் மக்களைப் பற்றி என்தால், இயக்குனர் சற்குணம் பாராட்டப்பட வேண்டியவர்.

கிராம சேவா அமைப்பு மூலம் படிப்பறிவில்லாத கிராமத்தில் ஆசிரியராக வேலை செய்தால், அதனால் கிடைக்கும் சான்றிதழ் மூலம் ஈசியாக அரசு வேலைக் கிடைத்துவிடும், என்கிற கனவோடு 'கண்டெடுத்தான் காடு" கிராம மக்களுக்கு படிப்புச் சொல்லிக் கொடுக்க வருகிறார் ஆசிரியர் விமல்.அங்குள்ள மக்கள் படிப்பறிவில்லாமல் செங்கல் சூளையில் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். கல்வியின் பெருமைத் தெரியாத கிராமவாசிகள், அவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி சொல்லிக் தரக்கூடாது என்று எதிர்க்கும் செங்கல் சூளை அதிபர் பொன் வண்ணன், இவர்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு முழிக்கும் விமல், பிள்ளைகளுக்கு படிப்புச் சொல்லிக் கொடுத்தாரா, இல்லையா? அவருக்கு அரசு வேலை கிடைத்ததா? இல்லையா எனபது தான் கதை. படம் பார்ப்பவர்களை சலிப்படையச் செய்யாமல் சிரிக்க வைத்து, ரசிக்க வைப்பதில் பல பட்டப் படிப்புக்கள் படித்திருப்பார் போல இயக்குனர் சற்குணம்.

படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் பாராட்டுக்குரியவர். செங்கல் சூளையில் வாழும் மக்கள் படும் துயரங்களையும், புழுதிக் காற்றும், பொக்கை விழுந்த கிராமத்து மனிதர்களையும், மண்ணிற்கும், மனிதனுக்கும் உள்ள உறவை மண் மனம் மாறாமல் வளைத்து வளைத்துப் படம் பிடித்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்.



இப்படத்தின் நிஜ ஹீரோக்கள் கல்வி கற்காமல் செங்கல் சூளையில் வேலை செய்யும் சிறுவர்கள் தான்.ஒவ்வொரு குழந்தைகளும் விமல் படிக்கச் சொல்லி அழைப்பாரோ என்று பயந்துக் கொண்டு ஓடி, நம்மை சிரிக்க வைத்தும், பின்னர் படிப்பின் அருமையை உணர்ந்து ஆர்வமாக கற்று, தன் அம்மாவிற்கு சிலேட்டில் கையெழுத்துப் போடக் சொல்லிக் கொடுத்து, அதை விமலிடம் எடுத்து வந்து காட்டும்போதும் நம்மை உருக வைத்து, கைதட்டல்களைப் பெறுகிறார்கள். படத்தில் சுவாரசியம் கூட்டி, வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் பொறுப்பும் இந்த சிறுவர்களிடமே ஒப்படைக்கப் பட்டுள்ளது.

இதில் நடித்துள்ளவர்களில் ஒரு சிலர் மட்டுமே நமக்கு ஏற்கனவே அறிமுகமான முகங்கள். மற்ற அனைவரும் புதுமுகங்கள். ஒவ்வொருவரும் மிகையில்லாமல் தங்கள் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறார்கள். இந்த புது முகங்களைப் பார்க்கும்போது திறமையான இவர்கள், இத்தனை நாள் எங்கு மறைந்திருந்தார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. சின்னச் சின்ன நிகழ்வுகளை, சின்னப் பிள்ளைகளோடு சேர்த்து விளையாடி இருப்பாரோ சற்குணம், அத்தனை சின்னப் பிள்ளைகளின் காட்சி அமைப்புகள் அழகு கவிதைகளாக செதுக்கி இருக்கிறார்.

விமல் நடிப்பு யதார்த்தம் தான், ஆனால் பத்தவில்லை. எங்கு கண்டுப் பிடித்தார்கள் இந்த தமிழ்ப்பெண்ணை என்று மனம் கேட்கச் சொல்லுகிறது. ஹீரோயின் இனியாவை பார்க்கும் போது. எத்தனை, எத்தனை முகப்பாவனைகள் அத்தனையும் இனியாவுக்கே சொந்தமா? படம் பார்ப்பவர்களை நினைக்க வைக்கிறார். க்யூட்



இக்காலத்து நகரத்துப் பிள்ளைகள் அறியும் வகையில், அவர்கள் பார்த்திடாத, கேட்டிடாத நத்தை, தும்பி, உடும்பு, மொடக்கத்தான் தழை, எருக்கம் பூ, கருப்பட்டி, அம்மி, ஆந்தை,கு ளத்து மீன்கள் என்று அத்தனையும் இப்படத்தில் அழகாக நாம் பார்த்து ரசிக்கும்படி பதிவு செய்துள்ளார் சற்குணம். படம் பார்ப்பவர்களையும் அவைகளுடனேயே 2 .30 மணி நேரம் சேர்ந்து வாழ வைத்துள்ளார். இனிமையான புது அனுபவம் நமக்கு ஏற்படுவதை நிச்சயமாக தவிர்க்க முடியாது.

"பிள்ளைகள் படிக்க வராததால், பாடம் நடத்தாமலேயே சம்பளம் வாங்கும் விமலைப் பார்த்து குருவிக்காரராக வரும் வயதான முதியவர் "நீ விதைக்கல, ஆனா அறுக்கற" என்று பேசும் வசனம் நம் கவனத்தை பெரிதும் ஈர்த்து கைதட்டல்களைப் பெற வைக்கிறது.இந்த வசனம் உலகில் உழைக்காமல் மற்றவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பவர்களுக்கு செருப்படி. படத்தில் மிகவும் ஈர்த்த வசனமும் இது தான். மேலும் கிராம மக்கள் லாரியை ராலி என்றும், ரேடியோவை லேடியோ என்று அழைக்கும்போதும்,ரேடியோவில் பாடல்களைக் கேட்டுவிட்டு மனிதன் அதுக்குள்ளே இருந்து பாடுறான், நாம அடிச்சா செத்துப் போய்டுவான் என்று வெள்ளந்தியாகக் கூறும்போதும் ரசிக்க வைக்கிறார்கள்.

நல்ல திறமையான நடிகர் பொன்வண்ணன். ஏனோ சற்குணம் அவரை சரியாகப் பயன்படுத்தவில்லை. இரண்டு சீன்ல மட்டும் கெஸ்ட் ரோலா வந்துட்டுப் போறாரு பாக்கியராஜ். படத்தின் மிகப்பெரியப் பலம் இசை தான். இது ஒரு பீரியட் படம் என்பதால் இசையமைப்பாளர் கிப்ரான், பின்னணி இசையை பக்குவமாக கையாண்டு, படத்திற்கு தகுந்த மாதிரி இசையமைத்து நம் காதுகளை இனிமையாக்குகிறார். "போறானே போறானே" பாடல் சான்சே இல்லை. எப்பொழுதும் கேட்டுக்கொண்டே முனுமுனுக்க வைக்கும் ரகம். போறானே பாடல் கேட்க இனிமை என்றால், மற்றொரு பாடலான "சாரக் காத்து" பாடலோ பார்ப்பதற்கு கொள்ளை அழகு. அப்பாடல் நம் கண்களுக்கு விருந்தளித்ததுப் போல் இருக்கும். பாடல்களைப் பார்க்கும்போது, அவரவர் சிறு வயது நினைவுகளும்,கிராமத்தில் வாழ்ந்த அழகான நாட்களும் கண்முன்னே விரியத் தொடங்கி விடும். அவ்வளவு கொள்ளை அழகாகப் பாடல்களைப் படமாக்கியுள்ளார்கள்.

ஒன்று மட்டும் புரியவில்லை தமிழகத்தில் எந்த மூலையிலும் கிடைக்கும் விளாங்காயை சாப்பிட்டு விட்டு விஷக்காய், என்று விமல் பதறும் போது, ஒரு வாத்தியாருக்கு படித்த மனிதனுக்கு விளாங்காய் தெரியாதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. இந்த ஜோடிக்கப்பட்ட காட்சியமைப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தொட்டுக் கொள்ள ஊறுகாயும் இல்லை.விட்டுக் கொடுக்க கற்பனையும் இல்லை. ஆக மொத்தம் வாகை சூட வா கவனிக்கப் படாத செங்கல் சூளையில் வேலை செய்யும் மனிதர்களின் வாழ்க்கை பற்றியப் படைப்பு. காலம் கடந்து விட்டது சற்குணம் சார், இப்படத்தில் இன்னும் நிறைய சேர்த்து இருக்கலாம். கோர்வை இல்லாமல் செல்லும் கதையில் ஒரு சின்ன சந்தோசம், விமல் மேல் இனியா வைக்கும் காதல் மட்டுமே.  




செங்கல் சூளைகளில் இன்றும் பல மக்கள் படிப்பறிவில்லாததால் அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர். இது ஒரு விழிப்புணர்வுப் படம் என்பதால் அனைவரும் பார்க்க வேண்டியப் படம்.

மண்ணுக்கும், மனிதனுக்கும் உள்ள வாழ்வியலை அழகாகப் பதிவு செய்ததற்காக சற்குணத்திற்கு வாழ்த்துக்கள் !!!

13 கருத்துகள்:

  1. மிகவும் அருமையாக விமர்சனத்தை அளித்துள்ளீர்கள், உங்களின் பதிவை பார்த்த பிறகு படம் பார்க்க ஆவல் ஏற்படுகிறது... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. இவ்வளவு அருமையாக விமர்சனம் செய்தும் படத்தை பார்க்க மனசு வரலையே வினி

    பதிலளிநீக்கு
  3. அழகாகஉள்ளது உங்கள் விமர்சனம் ,

    பதிலளிநீக்கு
  4. அருமையான விமர்சனம். இது போன்ற படங்களை நம் 'ரசிகன்' புரிந்து கொள்வானா என்பது சந்தேகமே.

    பதிலளிநீக்கு
  5. நல்ல திரை பாடங்களை வெற்றி பெற வெய்ப்போம் ....

    பதிலளிநீக்கு
  6. //தொட்டுக் கொள்ள ஊறுகாயும் இல்லை.விட்டுக் கொடுக்க கற்பனையும் இல்லை. ஆக மொத்தம் வாகை சூட வா கவனிக்கப் படாத செங்கல் சூளையில் வேலை செய்யும் மனிதர்களின் வாழ்க்கை பற்றியப் படைப்பு.//

    //மண்ணுக்கும், மனிதனுக்கும் உள்ள வாழ்வியலை அழகாகப் பதிவு செய்ததற்காக சற்குணத்திற்கு வாழ்த்துக்கள் !!!//கவித்துவமான வரிகள். வார்தைகள் நர்த்தனமாடுதே வினி. கலக்குங்க

    பதிலளிநீக்கு
  7. விமர்சனம் சரியே. இனியாவைத்தவிர வேறு யாரும் அவ்வளவாக கவரவில்லை. ஒளிப்பதிவு மிக அருமை. அதைப்பற்றி விரிவாக சொல்லியிருக்கலாம். க்ளைமாக்ஸ் காட்சி எனக்கு பிடிக்கவில்லை. கடைசிகட்டத்தில் எதாவது பெரிய திருப்பம் வரும் என்று எதிர்ப்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். திரைக்கதையை மெதுவாக நகர்த்திச்சென்று திடீரென முடிக்கிறார்கள்.

    தங்கள் விமர்சனத்திற்கு வேண்டுமானால் வாகை சூட்டலாம். படத்திற்கு சூட்ட என்னால் முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  8. vini....i am very sorry!...
    i am very sorry.............
    i am very sorry........
    pls!..................

    பதிலளிநீக்கு