30 செப்டம்பர், 2011

"வாகை சூட வா" திரை விமர்சனம்

ஒவ்வொரு செங்கற்களாய் சேர்த்து ரசித்துக் கட்டப்பட்ட வீடு போலத்தான் உள்ளது "வாகை சூட வா" திரைப்படம். நிச்சயமாக அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது. எங்கோ நடந்து முடிந்த ஒருப் பதிவை நமக்குப் படம் பிடித்துக் காட்டி, நம் மனதை களவாடிய களவாணி இயக்குனரின் அடுத்த பிரமிப்பு தான் "வாகை சூட வா".



"இளமையில் கல், அது செங்கல் சூளையின் கல் அல்ல" என்ற ஒரு நல்ல கருத்தைக் மொத்த டீமும் பதிவு செய்துள்ளனர். இப்படம் ஒரு பீரியட் படம் என்பதால் பார்த்துப், பார்த்து அழகான காவியமாக ரசிக்கும்படி செதுக்கியுள்ளார்கள். படத்தின் கதைக்கான களம் இதுவரை தமிழ் சினிமா இயக்குனர்கள் கை வைக்காத செங்கல் சூளையில் வாழும் மக்களைப் பற்றி என்தால், இயக்குனர் சற்குணம் பாராட்டப்பட வேண்டியவர்.

கிராம சேவா அமைப்பு மூலம் படிப்பறிவில்லாத கிராமத்தில் ஆசிரியராக வேலை செய்தால், அதனால் கிடைக்கும் சான்றிதழ் மூலம் ஈசியாக அரசு வேலைக் கிடைத்துவிடும், என்கிற கனவோடு 'கண்டெடுத்தான் காடு" கிராம மக்களுக்கு படிப்புச் சொல்லிக் கொடுக்க வருகிறார் ஆசிரியர் விமல்.அங்குள்ள மக்கள் படிப்பறிவில்லாமல் செங்கல் சூளையில் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். கல்வியின் பெருமைத் தெரியாத கிராமவாசிகள், அவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி சொல்லிக் தரக்கூடாது என்று எதிர்க்கும் செங்கல் சூளை அதிபர் பொன் வண்ணன், இவர்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு முழிக்கும் விமல், பிள்ளைகளுக்கு படிப்புச் சொல்லிக் கொடுத்தாரா, இல்லையா? அவருக்கு அரசு வேலை கிடைத்ததா? இல்லையா எனபது தான் கதை. படம் பார்ப்பவர்களை சலிப்படையச் செய்யாமல் சிரிக்க வைத்து, ரசிக்க வைப்பதில் பல பட்டப் படிப்புக்கள் படித்திருப்பார் போல இயக்குனர் சற்குணம்.

படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் பாராட்டுக்குரியவர். செங்கல் சூளையில் வாழும் மக்கள் படும் துயரங்களையும், புழுதிக் காற்றும், பொக்கை விழுந்த கிராமத்து மனிதர்களையும், மண்ணிற்கும், மனிதனுக்கும் உள்ள உறவை மண் மனம் மாறாமல் வளைத்து வளைத்துப் படம் பிடித்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்.



இப்படத்தின் நிஜ ஹீரோக்கள் கல்வி கற்காமல் செங்கல் சூளையில் வேலை செய்யும் சிறுவர்கள் தான்.ஒவ்வொரு குழந்தைகளும் விமல் படிக்கச் சொல்லி அழைப்பாரோ என்று பயந்துக் கொண்டு ஓடி, நம்மை சிரிக்க வைத்தும், பின்னர் படிப்பின் அருமையை உணர்ந்து ஆர்வமாக கற்று, தன் அம்மாவிற்கு சிலேட்டில் கையெழுத்துப் போடக் சொல்லிக் கொடுத்து, அதை விமலிடம் எடுத்து வந்து காட்டும்போதும் நம்மை உருக வைத்து, கைதட்டல்களைப் பெறுகிறார்கள். படத்தில் சுவாரசியம் கூட்டி, வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் பொறுப்பும் இந்த சிறுவர்களிடமே ஒப்படைக்கப் பட்டுள்ளது.

இதில் நடித்துள்ளவர்களில் ஒரு சிலர் மட்டுமே நமக்கு ஏற்கனவே அறிமுகமான முகங்கள். மற்ற அனைவரும் புதுமுகங்கள். ஒவ்வொருவரும் மிகையில்லாமல் தங்கள் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறார்கள். இந்த புது முகங்களைப் பார்க்கும்போது திறமையான இவர்கள், இத்தனை நாள் எங்கு மறைந்திருந்தார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. சின்னச் சின்ன நிகழ்வுகளை, சின்னப் பிள்ளைகளோடு சேர்த்து விளையாடி இருப்பாரோ சற்குணம், அத்தனை சின்னப் பிள்ளைகளின் காட்சி அமைப்புகள் அழகு கவிதைகளாக செதுக்கி இருக்கிறார்.

விமல் நடிப்பு யதார்த்தம் தான், ஆனால் பத்தவில்லை. எங்கு கண்டுப் பிடித்தார்கள் இந்த தமிழ்ப்பெண்ணை என்று மனம் கேட்கச் சொல்லுகிறது. ஹீரோயின் இனியாவை பார்க்கும் போது. எத்தனை, எத்தனை முகப்பாவனைகள் அத்தனையும் இனியாவுக்கே சொந்தமா? படம் பார்ப்பவர்களை நினைக்க வைக்கிறார். க்யூட்



இக்காலத்து நகரத்துப் பிள்ளைகள் அறியும் வகையில், அவர்கள் பார்த்திடாத, கேட்டிடாத நத்தை, தும்பி, உடும்பு, மொடக்கத்தான் தழை, எருக்கம் பூ, கருப்பட்டி, அம்மி, ஆந்தை,கு ளத்து மீன்கள் என்று அத்தனையும் இப்படத்தில் அழகாக நாம் பார்த்து ரசிக்கும்படி பதிவு செய்துள்ளார் சற்குணம். படம் பார்ப்பவர்களையும் அவைகளுடனேயே 2 .30 மணி நேரம் சேர்ந்து வாழ வைத்துள்ளார். இனிமையான புது அனுபவம் நமக்கு ஏற்படுவதை நிச்சயமாக தவிர்க்க முடியாது.

"பிள்ளைகள் படிக்க வராததால், பாடம் நடத்தாமலேயே சம்பளம் வாங்கும் விமலைப் பார்த்து குருவிக்காரராக வரும் வயதான முதியவர் "நீ விதைக்கல, ஆனா அறுக்கற" என்று பேசும் வசனம் நம் கவனத்தை பெரிதும் ஈர்த்து கைதட்டல்களைப் பெற வைக்கிறது.இந்த வசனம் உலகில் உழைக்காமல் மற்றவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பவர்களுக்கு செருப்படி. படத்தில் மிகவும் ஈர்த்த வசனமும் இது தான். மேலும் கிராம மக்கள் லாரியை ராலி என்றும், ரேடியோவை லேடியோ என்று அழைக்கும்போதும்,ரேடியோவில் பாடல்களைக் கேட்டுவிட்டு மனிதன் அதுக்குள்ளே இருந்து பாடுறான், நாம அடிச்சா செத்துப் போய்டுவான் என்று வெள்ளந்தியாகக் கூறும்போதும் ரசிக்க வைக்கிறார்கள்.

நல்ல திறமையான நடிகர் பொன்வண்ணன். ஏனோ சற்குணம் அவரை சரியாகப் பயன்படுத்தவில்லை. இரண்டு சீன்ல மட்டும் கெஸ்ட் ரோலா வந்துட்டுப் போறாரு பாக்கியராஜ். படத்தின் மிகப்பெரியப் பலம் இசை தான். இது ஒரு பீரியட் படம் என்பதால் இசையமைப்பாளர் கிப்ரான், பின்னணி இசையை பக்குவமாக கையாண்டு, படத்திற்கு தகுந்த மாதிரி இசையமைத்து நம் காதுகளை இனிமையாக்குகிறார். "போறானே போறானே" பாடல் சான்சே இல்லை. எப்பொழுதும் கேட்டுக்கொண்டே முனுமுனுக்க வைக்கும் ரகம். போறானே பாடல் கேட்க இனிமை என்றால், மற்றொரு பாடலான "சாரக் காத்து" பாடலோ பார்ப்பதற்கு கொள்ளை அழகு. அப்பாடல் நம் கண்களுக்கு விருந்தளித்ததுப் போல் இருக்கும். பாடல்களைப் பார்க்கும்போது, அவரவர் சிறு வயது நினைவுகளும்,கிராமத்தில் வாழ்ந்த அழகான நாட்களும் கண்முன்னே விரியத் தொடங்கி விடும். அவ்வளவு கொள்ளை அழகாகப் பாடல்களைப் படமாக்கியுள்ளார்கள்.

ஒன்று மட்டும் புரியவில்லை தமிழகத்தில் எந்த மூலையிலும் கிடைக்கும் விளாங்காயை சாப்பிட்டு விட்டு விஷக்காய், என்று விமல் பதறும் போது, ஒரு வாத்தியாருக்கு படித்த மனிதனுக்கு விளாங்காய் தெரியாதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. இந்த ஜோடிக்கப்பட்ட காட்சியமைப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தொட்டுக் கொள்ள ஊறுகாயும் இல்லை.விட்டுக் கொடுக்க கற்பனையும் இல்லை. ஆக மொத்தம் வாகை சூட வா கவனிக்கப் படாத செங்கல் சூளையில் வேலை செய்யும் மனிதர்களின் வாழ்க்கை பற்றியப் படைப்பு. காலம் கடந்து விட்டது சற்குணம் சார், இப்படத்தில் இன்னும் நிறைய சேர்த்து இருக்கலாம். கோர்வை இல்லாமல் செல்லும் கதையில் ஒரு சின்ன சந்தோசம், விமல் மேல் இனியா வைக்கும் காதல் மட்டுமே.  




செங்கல் சூளைகளில் இன்றும் பல மக்கள் படிப்பறிவில்லாததால் அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர். இது ஒரு விழிப்புணர்வுப் படம் என்பதால் அனைவரும் பார்க்க வேண்டியப் படம்.

மண்ணுக்கும், மனிதனுக்கும் உள்ள வாழ்வியலை அழகாகப் பதிவு செய்ததற்காக சற்குணத்திற்கு வாழ்த்துக்கள் !!!

10 செப்டம்பர், 2011

வலை வீசம்மா... வலை வீசு !!!


அது மீனவ கிராமமல்ல.... ஆனால், ஒவொரு வீட்டின் முன்பும் மீன் பிடிக்கும் வலைகள் விரித்து வைக்கப்பட்டு உலர்ந்து கொண்டிருந்தன. சுவர்களில் சாய்த்து வைக்கப்படிருந்த படகுத் துடுப்புகள்
கம்பீரமாக நின்றுகொண்டிருந்தன. அது,கடலூர் மாவட்டம் பிசாவரத்தை சார்ந்த எம்.ஜி.ஆர் நகர். இங்கு சுமார் 150 குடும்பங்கள் வசிக்கின்றன. அனைவரும் இருளர் இன மக்கள்.


 
படத்தின் முழு அளவைப் பார்க்க அதன் மேல் சொடுக்கவும்

இந்த இனத்தை சேர்ந்தவர்கள் காட்டெலி,முயல்,உடும்பு பிடிப்பதையே தொழிலாகச் செய்து வந்தார்கள். ஆனால், அதில் பெரியதாக வருமானம் இல்லை. விற்கும் விலைவாசியில் எதையும் வாங்கும் அளவிற்கு இவர்களிடம் பொருளாதாரமும் இல்லை. அதனால் இவர்கள் தேர்ந்தெடுத்த தொழில் மீன் பிடித்தல். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் படகில் மீன் பிடிக்கச் செல்பவர்கள் ஆண்களல்ல, பெண்கள்.

இவ்வூர் பெண்கள் இரவுப், பகல் பார்க்காமல் தன்னம்பிக்கை என்னும் துடுப்பைப் போட்டு படகு ஓட்டி  பிச்சாவரத்தில் உள்ள ஆற்றில் மீன் பிடிக்கச் செல்கிறார்கள். தமிழகத்தில் இதுபோல் வேறெங்கும் பெண்கள் தனியாக ஆற்றில் மீன்பிடிக்கச்  செல்வதில்லை.
 
பக்கத்து கிராமங்களில் இருக்கும் எல்லா மக்களுக்கும் இங்கு வசிக்கும் பெண்கள் ஓர் பேரதிசயம், காரணம் அனைத்து பெண்களும் ஆண்களின் துணை இல்லாமல், ஆற்றில் துடுப்பு போட்டு வலைவீசி மழை, வெயில் தாண்டிய அவர்களது உழைப்பால் நிமிர்ந்து நிற்கின்றனர். ஆனால் இவர்கள் மீனவர்கள் இல்லை, வறுமை இப்பெண்களை அந்த வாழ்க்கைக்கு கொண்டுச் சென்றுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் வறுமை தாண்டிய நிலையான எதிர்பார்ப்பு, எங்கு கிடைக்கும் மீன், மீன், மீன் !!!!!!!


இந்தப் பெண்களை பார்க்கும்போது பூங்குழலி பெயர் ஞாபகம் வருகிறது. யாரெண்டு கேட்காதிர்கள். பூங்குழலி என்ற பெயர் உண்மையோ, பொய்யோ "பொன்னியின் செல்வன்" படித்த அனைவருக்கும் ராஜ, ராஜசோழன், வந்தியத்தேவன் உட்பட வாசகர்களுக்குள் அவள் தான் கடலில் வழிகாட்டி. அவள் ஒரு மீனவப் பெண். பூங்குழலி தான் மறு உருவம் எடுத்து படகில் அமர்ந்து இருப்பது போல் ஒருத் தோற்றம் இருந்தது இந்த பெண்களைப் பார்த்தபோது.


அந்த பெண்களுடன் ஒருப் படகில் ஏறிக் கொண்டபோதுஇரண்டு, இரண்டுப் பேராக படகை நகர்த்திக் கொண்டு தண்ணீரில் இறங்குகிறார்கள். படகில் ஏறி அமர்ந்து துடுப்பைப் போடும் வேகத்தில் பூச்சரம் தொடுக்கும் கைகளில் புயல் வேகம் தெரிந்தது. ஆற்றில் பாதி தூரம் சென்றதும் ஒவ்வொரு படகிலும் உள்ள பெண்கள் நீண்ட வலைகளை எடுத்து தண்ணீரில் விசிறி எறிகிறார்கள். தண்ணீருக்குள் விரிந்து மூழ்கி மறையும் வலை, சற்று நேரத்தில் பல நூறு மீன்களுடன் வலை படகுக்குள் இழுத்துப் போடப்படுகிறது. அனைவரது முகத்திலும் தன் உழைப்புக்கான ஊதியம் கிடைக்கப்போகிறது என மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வலையில் சிக்கிய மீன்களைப் பார்த்தபோது. எத்தனை தன்னம்பிக்கை வறுமையை வெல்லவேண்டும் என்ற வைராக்கியம்!!

படத்தின் முழு அளவைப் பார்க்க அதன் மேல் சொடுக்கவும்

"அவர்களின்  வாயிலிருந்து வந்த அவர்களை பற்றிய வாழ்வியல் கதை இதோ;

"
இந்த மீன்பிடித் தொழிலை நாங்க 2 வருசமா செய்துகொண்டு வருகிறோம். எங்க வீட்டு ஆம்பிள்ளைங்க அவர்களுக்கு என்ன வேலை செய்யத் தோணுதோ அந்த வேலைக்கு போய்டுவாங்க. மாசத்துல நாலு நாளைக்கு மட்டும் தான் வேர்கடலை போடுற வேலை கிடைக்கும். அத விட்டா வேற பொழப்பு எங்களுக்குக் கிடையாது. தினமும் ஏதாவது ஒரு வேளை பட்டினியாகத்தான் இருப்போம். எங்க வயிற்றுப் பசியையும், பிள்ளைகளின் பசியையும் அந்த வேலையை வைத்து தீர்க்க முடியல. அதானால் தான் வறுமைக்கு ஒரு முடிவு கட்ட  எல்லா பெண்களும் சேர்ந்து, இயற்கை அன்னையால் பரந்து விரிந்துள்ள பிச்சாவரம் ஆற்றில் மீன் பிடிக்காலம் எனத்  தீர்மானித்தோம் என்று தாங்கள் மீன் பிடிக்க வந்ததான் பின்னணியை சோகத்துடன் கூறுகிறார் பரமேஸ்வரி என்கிற பெண்.
 
இந்த பெண்களின் வாழ்க்கையில் ஒரு ஒதுக்கி வைக்கப்படும் பொருளாதார பின்னணி இருக்கிறது. இருளர் இன ஆண்கள் என்ன தொழில் செய்யவேண்டும் என்பதை சமுதாயம் நிர்ணயித்து கொடுத்திருகிறது. காட்டெலி பிடிப்பது, முயல், உடும்பு பிடிப்பது தான் அவர்களின் தொழில். இதில் என்ன வருமானம் இருக்கும். உலகம் ஜாதி, மதம் கடந்து ஒரு விற்பனை உருண்டையாக மாறிவிட்டது. விலை பேசி வாங்கும் அளவிற்கு இந்த மக்களிடம் வருமானம் இல்லை.

"
என் புருஷன் இறந்ததால் என்னையும், பிள்ளைகளையும் காப்பாற்றிக் கொள்ள வேறு வழித் தெரியல. எங்களுக்கு இது பழக்கமில்லாத வேலை தான். ஆனால், உயிர் வாழணுமே. அதனால பழகிக்கிட்டோம். வலையை தூக்கி வீசும்போதும், மீன்களோடு வலையை தூக்கும்போதும் இது ஆண்களுக்கு மட்டுமே ஆன தொழில் என்பதை உணர்ந்தாலும், பழகப் பழக எந்த கஷ்டமும் தெரியவில்லை. புதுசா ஆத்துல போய் மீன் பிடிக்கும்போது ரொம்ப சிரமமாகத்தான் இருந்தது. எங்களின் தன்னம்பிக்கையால் முடியும்னு நம்பிக்கை வைத்தோம், அது வீண் போகல. சில நேரம் 500 ரூபாய் விற்குற வரைக்கும் மீன் கிடக்கும், அதுவே வெறும் வலையோடவும் ஒண்ணுமே கிடைக்காம திரும்பியும் வந்திருக்கோம். பல முறை வலைகளில் பாம்பும் கிடைச்சிருக்கு. மீன் கிடைக்கலனா 4 அடி இருக்குற ஆத்துல இறங்கி மூழ்கி இங்க இருக்குற காடுகளின் வேர்களை பிடித்து உலுக்குவோம் அப்போதுதான் மீன்கள் கலைந்து வலையில் மாட்டும். ஒவ்வொரு முறையும் இப்படி பண்ணும்போது உயிரை பணயம் வைத்து தான் செய்கிறோம். ஏனென்றால் ஆழமும் இருக்கும். பாம்பு, நீச்சல் அடிப்பது போன்ற சவாலான விஷயங்கள் இருக்கின்றன, சென்னையை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் தான் எங்களின் ஏழ்மை நிலையை பார்த்து இரண்டு குடும்பத்திற்கு ஒரு படகு என வாங்கிக் கொடுத்தது. இந்த படகையும், என் இரண்டு கைகளையும் தான் கடவுளா நினைக்குறேன் என்று கண்கள் விரிய வளர்மதி என்ற பெண் நம்மிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே அவரது கால் விரலை ஒரு நண்டு கவ்விக் கொள்கிறது.
படத்தின் முழு அளவைப் பார்க்க அதன் மேல் சொடுக்கவும்

இந்த தன்னம்பிக்கை பெண்கள் காலை 5 மணிக்கே சாப்பாடு கட்டிக்கொண்டு ஆற்றில் மீன்பிடிக்கச் சென்று மாலை 4 மணிக்கு திரும்புகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இரவு 7 மணிக்கு படகேறி விடியகாலை 3 மணிக்கு மீன்பிடித்துக் கொண்டு கரைச் சேர்கிறார்கள். இரவுப், பகல் பார்க்காமல் ஆற்றிலேயே இருக்கும் இவர்களின் மனதில் துளியளவும் பயமில்லை. முகத்திலும் அதை காணமுடிவதில்லை. தினமும்   8 கிலோ மீட்டருக்கு மேல் மீன்பிடிக்கச் செல்லும் இந்த பெண்களுக்கு    மோட்டார் படகு வாங்க வசதி இல்லாததால் கடலுக்குச் செல்வதில்லை.

"
முன்னாடி எல்லாம் மழை வந்தால் நாங்கள் அதிலும் பயமில்லாமல் படகு ஓட்டுவோம். கொஞ்ச நாளைக்கு முன் மீன் பிடிக்கப்போன எங்க சமூகத்தை சேர்ந்த ஒருவர் மழை வரும்போதே படகு ஓட்டியதால் இடித் தாக்கி இறந்துவிட்டார். அதனால் ஆற்றில் இருக்கும்போது  மழை வந்ததால் விடும்வரை படகிலேயே கூடாரம் போட்டு விட்டப் பிறகுதான் அங்கிருந்து கிளம்புவோம். காற்று அடிக்கும்போது வலையை வீசமுடியாது. மழையும், காற்றும் மாறி மாறி வந்தால் எங்கள் வயிறு தான் காய்ந்து போகும். அது வரை எங்காவது கடன் வாங்கியும், வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்தும் பிழைப்பை ஓட்டுவோம். ஆற்றில் இறால், சங்கரா மீன், நண்டு, வாளை மீன், கெளித்தி மீன் போன்ற பல வகைகள கிடைக்கும். அதில் கெளித்தி மீன் கடித்து பல முறை விழம் ஏறியுள்ளது. ஆற்றில் கிடக்கும் கூர்மையான ஆழிகள் பலமுறை கால்களை பதம் பார்த்துள்ளது. இதை எல்லாம் தாங்கிக்கொண்டு தான்  வயிற்றை நிரப்ப ஆற்றுடன் போராடுகிறோம். ரொம்ப நேரம் உட்கார்ந்து கொண்டு துடுப்பு போடுவதால் தொள்ப்பட்டையும், விளா எலும்பும் வலிக்கும். இது எல்லாம் கொஞ்ச நேரம் தான் மீனை பார்த்தவுடன் வலியெல்லாம் பறந்து போய்டும் என்று கூறிக்கொண்டே மீன் கடித்து விழம் ஏறிய தன்  கைகளை நம்மிடம் காட்டுகிறார் முனியம்மா.
 
இந்த ஊரை சேர்ந்த சுரேஷ் நம்மிடம் பேசும்போது ;
 
எங்க சமூக ஆண்களுக்கு மாசத்துல எப்பவாவது வாய்க்கால் வெட்டுற வேலை கிடைக்கும் அதுக்கு போய்டுவோம். மீதி நேரமெல்லாம் எங்கள் மனைவிகள் ஆற்றிலிருந்து கொண்டுவரும் மீனை அருகில் இருக்கும் கிராமங்களுக்கு விற்று வருவோம். அது தான் எங்களுக்கு நிரந்தர வருமானம். மனைவிக்கு உடம்பு சரி இல்லனாத்தான் நாங்க மீன் பிடிக்கப்போவோம். இத்தனை நாளா ஆற்றுக்குப் போற என் மனைவி ஒரு நாள் கூட இந்த வேலை கஷ்டமா இருக்கு எனக்கு பிடிக்கலன்னு சொன்னது கிடையாது என்று  பெருமையுடன்  கூறுகிறார்.தன்னம்பிக்கையால் துடுப்பை போட்டு இந்த பெண்கள் பிடிக்கும் மீன்கள் இன்று பல மாவட்டங்களுக்கு செல்கிறது. இந்த சமூகத்தில் வாழும் பாதி மக்களுக்கு ரேஷன் கார்டுகள் கூட அரசு கொடுக்கவில்லை. ஏதாவது தொழில் செய்யலாம் என்று மானிய லோன் கேட்டால் கூட யாரும் கண்டுகொள்வதில்லை. 100 நாள் வேலைத்திட்டமும் தருவதில்லை.வாழ்க்கையில் நிரந்தரம் இல்லாதது எதையுமே மனிதன் சம்பாதித்து விடுகிறான். ஆனால் தன்னை வெல்வதில் தான் தோற்றுப் போகிறான். இந்த பெண்கள் அனைவரும் தங்களை வென்றவர்கள் அதானல் இவர்களிடம் வறுமை அடிப்பட்டுப் போகிறது. ஆண்களே மீன்பிடிக்கச் செல்லத் தயங்கும் இந்த காலத்தில் துணிச்சலாக செல்லும் இந்த பெண்களுக்கு சபாஷ் போடலாம்.


படத்தின் முழு அளவைப் பார்க்க அதன் மேல் சொடுக்கவும்

அன்புடன்
வினி சர்பனா.

5 செப்டம்பர், 2011

மலையேறிக் கற்பிக்கும் ஆசிரியர்


பணக்காரத் திமிருடன், எங்கும் செல்வ செழிப்பாய் காட்சியளிக்கும் ஏற்காடு மலை பலநூறு பழங்குடி மக்கள் வாழும் கிராமங்கள் சூழ்ந்த சுற்றுலாத் தளம். உச்சி வெயிலுக்குப் பயந்து ஏற்காடு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு மத்தியில், சேலத்தில் இருந்து தினம் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரின் பயணம் 15 வருடமாக தொடர்கிறது. இதில் என்ன ஆச்சர்யம் என்று கேட்கிறிர்களா? தரையில் இருந்து பல கிலோ மீட்டருக்கு மேலே இருக்கும் வாழிடம் தான் ஏற்காடு.அங்கு செல்லும் அந்த ஆசிரியரின் பெயர் ரவிக்குமார். அவர் செய்யும் தொண்டு பழங்குடி இனப் பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடுவது.

ஒருநாள் பயணமாக அவரது பள்ளிக்குச் சென்றபோது, அந்த அடர்ந்தக் காட்டுப் பாதையில் எவ்வளவு முயன்றும் எட்டிப் பார்க்க முடியாமல் திணறியது சூரிய ஒளிக்கதிர்கள். அவ்வளவுப் பெரிய அடர்த்தியான மரங்கள் கைக்கோர்த்து, வரிசையாக நின்று புதியதாய் வருபவர்களை தன் கிளைகளை அசைத்து வெல்கம் சொல்வதுபோல் ஒருத் தோற்றத்தை ஏற்ப்படுத்தியது.

" ஏற்காடு மலையில் 67 கிராமங்கள் உள்ளன. அதில் நாகரீக உடைகள் எட்டிப் பார்க்காத கிராமங்களும் உண்டு. மின்சார விளக்குகள் கண் சிமிட்டாத கிராமங்களும் உண்டு. 1996 ம் ஆண்டு நான் அங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தது முதல், இன்றுவரை கடந்த 15 வருஷமாக பெண் கல்வியின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வோடு வலியுறுத்தி வருகிறேன். முதன் முதலாக இந்தப் பகுதியில் ஆசிரியராக வந்தபோது, இம்மக்களின் நிலையை உணர்ந்து கொண்டேன். இங்கு வருகைப் பதிவு என்பது மலைக்கும், மதுவுக்கும் உள்ள வித்யாசம் போல் தான் இருக்கும். 50 பேர் மாணவர்கள் என்றால் 15 பேர் தினம் வருவதே அதிசயம் தான். அதுவும் பெண் குழந்தைகள் வருகை மிகவும் குறைவு. என்ன காரணம் என்று ஒரு நாள் விசாரிக்கச் சென்றேன். இவர்களின் பெற்றோர்களுக்கு சொல்லிக் கொள்ளும்படி வேலை வாய்ப்புகளும் கிடையாது. அருகில் இருக்கும் காப்பி தோட்டத்திற்கு பெண் குழந்தைகளையும் குடும்ப வறுமையால் வேலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். இதைப் பார்த்த நான்,அவர்களிடம் படிப்பின்அவசியத்தை விளக்கிச் சொல்லி, விளக்கிச் சொல்லியே எனது ஆசிரியர் பணி சமுதாயப் பணியாக மாறிவிட்டது போல் பிம்பம். ஆரம்பத்தில் இருந்து ஒத்துழைப்பு என்பது, எனக்கு இல்லாமல் போய் விட்டது. எனக்கு ஏன் என்று நானும் இருந்து விடவில்லை. முயற்ச்சியில் இருந்தும் பின்வாங்கவில்லை. பல நாள் வீட்டிற்கு செல்லாமல், இங்கேயே தங்கி இருந்து அதிகாலையில்  அந்த பெண் குழந்தைகளின் வீட்டிற்கு சென்று பெண்களில் சாதித்தவர்களின் கதைகளை கூறி பெற்றோரின் மனதை மாற்றுவேன். அதற்கு பலன் மெல்ல, மெல்ல கிடைக்க ஆரம்பித்தது. இதுபோல் ஏற்காட்டில் உள்ள பல கிராமங்களில் பெண் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, பேரணிகள் பல நடத்திக் காட்டினேன், அது இன்றும் தொடர்கிறது. இங்குள்ள கிராமங்களில் படிக்கும் வயதுள்ள ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் பள்ளிக்கு வரும்வரை எனது இந்த பயணம் தொடரும். இப்பகுதியில் உள்ள பெற்றோர்களையும் குற்றம் சொல்ல முடியாது. அரசாங்கத்தின் உதவிக் கரங்கள் நீளுவதே கிடையாது. அடிப்படை வசதிகள் இல்லாத் பல கிராமங்கள் இங்குண்டு. அன்றாடப் பிழைப்புக்கே அல்லாடும் மக்கள் ஏராளம்.

படத்தின் முழு அளவைப் பார்க்க அதன் மேல் சொடுக்கவும்
 

2009 ம் ஆண்டு ஏற்காட்டில் உள்ள வெள்ளக்கடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றேன். வெள்ளக்கடை பஞ்சாயத்து, செம்மனத்தம் பஞ்சாயத்து, மஞ்சக்குட்டைப் பஞ்சாயத்து என மூன்று பஞ்சாயத்துகளிலும் மொத்தம் 12 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். அனைவருமே எஸ்டி வகுப்பை சேர்ந்தவர்கள். இவர்களின் குழந்தைகள் எங்கள் பள்ளியில் தான் படிக்க வேண்டும்.

ஆனால் 8 ம் வகுப்பு வரை மட்டுமே இருந்ததால், உயர்நிலை, மேல்நிலை வகுப்பு படிக்க 12 கிமீ தொலைவில் உள்ள ஏற்காட்டிற்கு செல்ல வேண்டும். இதனால் பெற்றோர்கள் சிரமப்பட்டு பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது என நினைத்து பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார்கள். சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்மேகம் அவர்களை சந்தித்து, இங்கு உயர்நிலைப் பள்ளி வர மக்களுடன் சேர்ந்து போராடி நடுநிலைப் பள்ளியாக இருந்ததை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்திக் காட்டினேன். இந்த செயலால் தற்போது அனைத்து பெண் குழந்தைகளும் படிக்க வருகிறார்கள். இடைநிற்றலே இங்கு கிடையாது என்று பெருமையுடன் நம்மிடம் பேசினார் ரவிக்குமார்.

ஏற்காட்டில் பழங்குடி இன மாணவியான அகிலாண்டிஸ்வரி என்ற சிறுமி பள்ளிச் செல்லாமல் தன் வீட்டிலே இருந்தார். இதைப் பற்றிக் கேள்விப்பட்ட ரவிக்குமார் அந்த சிறுமியின் பெற்றோருக்கு பெண் கல்வியின் அவசியத்தை புரியவைத்து பள்ளியில் சேர்த்தார். இவரது கண்டுபிடிப்பான அந்த சிறுமி நாளடைவில் நன்கு படித்து வகுப்பிலேயே நன்றாக படிக்கும் மாணவியாக உருமாறினார். அதுமட்டுமில்லாமல் தேசிய நுண்ணறிவுத் தேர்வை எழுதி, அந்த மாணவி பாஸ் செய்தார். அதனால் ஏற்காட்டில் உள்ள 67 கிராமங்களிருந்து தேர்வான முதல் மாணவி, ஒரே மாணவி என்ற சிறப்பு அகிலாண்டிஸ்வரிக்கு கிடைத்தது. தேசிய நுண்ணறி தேர்வில் பாஸ் செய்ததால் தற்போது சேலம் மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் அந்த மாணவி படித்து வருகிறார். அவருக்கு ஐஏஎஸ் அல்லது ஐபிஸ் படிக்க ஆகும் செலவு அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்பது கூடுதல் சிறப்பு. படிக்காமல் வீட்டில் இருந்த சிறுமியை பள்ளியில் கொண்டு வந்து சேர்த்து, அந்த மாணவியை சாதிக்க வைத்த பெருமை ஆசிரியர் ரவிக்குமாருக்கே சேரும். இந்த நிகழ்ச்சியினால் ஏற்காட்டில் ரவிக்குமார் படு பிரபலம். எங்கள் ஆசிரியர் என்று ரவிக்குமாரை பெற்றோர்களும், மாணவர்களும், நடைபாதைக் கடை வைத்திருக்கும் வியாபாரிகளும் உரிமைக் கொண்டாடுகிறார்கள். அங்குள்ள ஒவ்வொரு வீட்டிற்கு முன்பும் ரவிக்குமாரின் காலடித் தடம் பதிந்திருக்கிறது.

பெண் கல்விக்காக இவரது சேவை நகரத்தில் இருப்பவர்களுக்கு ரொம்ப சாதாரணமாகத் தெரியும். ஒருமுறை இந்த பழங்குடி இன மக்கள் வாழும் கிராமத்திற்கு சென்றுப் பாருங்கள். ஏற்காடு உங்களுக்கு சுற்றுலாத் தளமாகத் தெரியாது. சோகங்கள் நிறைந்த கதை சொல்லும் தளமாகத் தெரியும். பழங்குடி இன மாணவர்களுக்கு உலக அறிவியல் பற்றியும், புவியியல் கூறுகள் பற்றியும், உலக வரலாறும் தெரிய வேண்டும் என்பதற்காக போராடி வரும் ரவிக்குமார், இக்கிராமங்களில் வசிக்கும் மக்களுகாக பல்வேறு மருத்துவ முகாம்களையும்,விழிப்புணர்வுகளையும் செய்து வருகிறார்.

 அவரைப் பலத்தொண்டு நிறுவங்கள் பின் தொடர்ந்தால் ஏற்காடு பழங்குடி இன மக்களின் கல்வித்தரம் உயரும். ஒரு நல்ல ஆசிரியர் தான் நாளைய சமுதாயத்தின் நம்பிக்கை தூண் அதில் ரவிக்குமாருக்கு நிச்சயம் இடமுண்டு.
இல்லாத வீட்டில் குடியிருக்காது சாமி. பெண்கள் கல்லாத வீட்டில் இருக்காது சமுதாய முன்னேற்றம். அன்று கல்லாத மக்கள் கள்ளிப் பாலைக் கொடுத்து கொன்றார்கள். இன்று பெண் குழந்தைகளுக்கு கல்விப் பாலைக் கொடுத்து முன்னேற்றி வருகிறார் ஆசிரியர் ரவிக்குமார்!

வாழ்த்துக்கள்

ஆசிரியர் ரவிக்குமாருக்கு வாழ்த்து தெரிவிக்க  9790230438

அன்புடன்
சர்பனா

3 செப்டம்பர், 2011

குரல் புதிது! பணி புதிது!

புதிய தலைமுறை இதழுக்கு நான் பேட்டிக் கண்டு எழுதிய முதல் கட்டுரை
 குரல் புதிது ! பணி புதிது 


சூரியன் உறங்கச் செல்லும் மாலை நேரம்,பல பறவைகளின் கூச்சல்களையும் சுமந்து நிற்கும் திருச்சி உறையூர் பஞ்சவர்னேசுவரர் ஆலயம் பார்பதற்க்கு பழமையான கோவில், அங்கு ஒரு இனிமையான குரல் நம்மை பின் தொடர்கிறது,அதை நாமும் பின் தொடர்ந்து சென்றால் கருவறையின் முன்பு அந்த இனிமையான குரலுக்கு ஓர் 28 வயது மதிப்புள்ள இளம் துறவி போல் இருக்கும் பெண்மணி பாடிக்கொண்டு இருக்கிறார். கடவுள் எவ்வளவு அழகு, என்ன நிறம் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் நம் கண்முன்னே தெரிவது கருமையான கற்களாகத்தான், பாடிக்கொண்டிருந்த பெண்மணியும் கடவுளோடு ஒத்து போகிறார் நிறத்தில். அவர் தான் தமிழகத்தின் முதல் பெண் ஓதுவார் அங்கயற்கண்ணி. தலித் சமூகத்தில் பிறந்த அங்கையற்கண்ணி முதல் ஓதுவராக பொறுப்பேற்று தமிழக இந்து சமய வரலாற்றில் இடம் பிடித்து விட்டார். உறையூரில் இனி எப்போது கல்வெட்டு அமைக்கப்பட்டாலும் அதில் நிச்சயமாய் அங்கையற்கண்ணியின் பெயரும் இடம் பெறும்.

தமிழ் மறவர்கள் பாடிய திருமுறை, தேவாரம் எல்லாம் அங்கையற்கண்ணி நாவில் கலைவாணி போல் வெளியே வந்து துள்ளி விளையாடுகிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர் பாடும் தேவாரப் பாடலில் மெய் மறந்து கடவுளை தரிசனம் செய்து கொண்டு இருக்கிறார்கள். கோவில் கருவறை முன்பு அகல்விளக்கு வெளிச்சத்தில் அங்கையற்கண்ணியின் குரல் கோவில் முழுவதும் ஒலிக்கிறது. அவரிடம் கேட்ட போது ;

' எனக்கு சொந்த ஊர் திருச்சியில் உள்ள செம்பட்டு தான். அப்பாவுக்கு நைட் வாட்ச்மேன் வேலை. நாங்க மொத்தம் ஆறு பேர். அக்கா, இரண்டு அண்ணன், தம்பி, தங்கைன்னு பெரிய குடும்பம். தெருவில் உள்ள அங்காளம்மன் கோவிலில் தினசரி சாயந்திர வேளைகளில் முதியவர் ஒருவர் பக்தி பாடல்களை ராகமாக பாடிக்கொண்டு இருப்பார். அவர் பாடுறதை கேட்டு நானும் பக்கத்தில் சென்று உட்கார்ந்துக்கொண்டு பாடி பல பக்தி பாடல்களை ராகமாய் பாடக் கற்றுக்கொண்டேன். அப்பொழுது எனக்கு ஆறேழு வயசு இருக்கும். கனவிலும் நினைத்து பார்க்கவில்லை பின்னாளில் நானும் ஒரு கோவிலில் நின்று படுவேன் என்று. குடும்ப கஷ்டத்துலயும் ரொம்ப கடினமா படிச்சி ப்ளஸ் டூ பாஸ் பண்ணேன். காலேஜ் படிக்க ஆசைதான் ஆனா குடும்பம் வறுமைல இருந்ததால் மேல படிக்க முடியல. திருச்சியில் 1996 -வருடம் அரசு இசைப்பள்ளி ஆரம்பித்தார்கள். அங்கு இலவசமா தவில், பரதம், தேவாரம், நாதஸ்வரம் சொல்லி கொடுத்தாங்க.இசை மேல் எனக்கு ஆர்வம் இருந்ததால சேர்ந்தேன்.

திருமுறை வகுப்பு மூன்று வருட படிப்பு. பஞ்சபுராணம் என்று  சொல்லப்படும், தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் போன்றவைகளில் இருந்து முக்கிய பாக்கள் பாடங்களாக அமைய பெற்றிருந்தது.

2004 - ல் சிறப்புத் தேர்ச்சி பெற்று இரண்டு வருடங்களாக வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். பெண்களை இதுவரைக்கும் ஓதுவார் பணிக்கு நியமித்ததில்லை, ஆனால் எனக்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் நானும் ஓதுவார் பணிக்கு விண்ணபிச்சேன். என்னோட அதிர்ஷ்டம் 2006 - ம் ஆண்டு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக தமிழகத்தின் முதல் பெண் ஓதுவாராகப் பணியமர்தப்பட்டேன். நான்கு வருடங்களாக இங்கு பணியில் உள்ளேன். இதுவரைக்கும் மாதம் 1500 ரூபாய் தான் சம்பளமா தராங்க. எனக்கு நிறைய பொருளாதார கஷ்டங்கள் இருக்கு என் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று வருத்தமுடன் சொல்லும் அங்கையற்கண்ணி ஆர்வமுள்ளவர்களுக்கு தேவாரமும் சொல்லித் தருகிறார்."

"மேல் வர்க்கம் தீண்டாத மக்கள் குடியில் பிறந்த அங்கையற்கண்ணியின் குடும்பம் தான் பெரியது என்றால், அவர் வாயிலிருந்து வரும் தேவார இசையும் பெரியது தான். கோவிலுக்கு பாடச் செல்லும் முதல் நாளே வானத்தில் உள்ள நூறு கோடி தேவர்களும் மலர் தூவி அனுப்பி வைத்தார்கள் போலும் இவர் தேவாரம் பாடுவதற்காக, ஏனென்றால் கடவுள் தான் மாற்றத்திற்கு அடிப்படையானவன். தாழ்ந்த குடியில் பிறந்தவர்க்கு தேவாரம் கற்கும் ஆர்வத்தையும், இந்து சமுதாய சடங்குகளை தகர்க்கும் துணிச்சலும் அங்கையற்கண்ணியிடம் இருந்து இருக்கும் போல் அதனால் தான் கடவுளும் ஆசிர்வதித்துள்ளர்.

அங்கையற்கண்ணியின் முந்தைய தலைமுறை யாருமே கோயில் சென்று பாடியதில்லை. அதை இந்து சமுதாயமும் ஏற்றுக் கொண்டதில்லை. இந்த 21 - ம் நூற்றாண்டில் எல்லாமே மாறி வரும்போது, இது இந்து சமுதாயத்தின் மிகப்பெரிய மாற்றம். பெண்களுக்கு முன்னோடியாக இருக்கும் அங்கையற்கண்ணி இந்து சமுதாயத்தின் உலக அதிசயம் தான். இவர் முதல் மனுஷி என்பதால் நாமும் மலர் தூவி வரவேற்போம். இவரது தேவார இசையை கேட்க விரும்பும் தமிழக மக்களே, திருச்சி உறையூருக்கு வாருங்கள். நீங்களும் சாமிக்கு ஓதி விட்டு செல்லுங்கள்.

அன்புடன்
வினி சர்பனா