21 அக்டோபர், 2011

ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்!

சட்டமன்றம், நாடாளமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை தரக் கூடாது என்று பல அரசியல் கட்சிகள் பல ஆண்டுகளாக முட்டுக்கட்டைப் போட்டுக் கொண்டிருக்கும் நம் நாட்டில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள, நாட்டார்மங்கலம் கிராம மக்கள் உள்ளாட்சித்  தேர்தலில் தங்கள் கிராமத்தில் உள்ள அனைத்துப் பதவிகளையும் பெண்களுக்கு மட்டுமே வழங்கி 100 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கிறார்கள். இதில் என்ன சிறப்பென்றால் அத்தனை பெண்களும் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராதவர்கள்!!!
பெரிதாக்க படத்தின் மேல் சொடுக்கவும்
"காட்டுமன்னார்கோவில் தொகுதியிலேயே மிகப் பெரிய கிராமம் என்ற சிறப்பும், அதிக மக்கள் தொகைக் கொண்ட கிராமம் என்ற பெருமையும், எங்க ஊருக்கு மட்டும் தான் உண்டு. 2500 குடும்பங்கள் வசித்து வரும் இங்கு, தலித், வன்னியர், பிள்ளைமார், முதலியார் போன்ற அனைத்து சாதி மக்களும் வசித்து வருகிறோம். எப்பொழுதுமே எனக்கு சாதி, மதத்தின் மீது நம்பிக்கை கிடையாது. கிராம மக்கள் அனைவரும் நீங்க தான் ஊராட்சி மன்றத் தலைவி பதவிக்குப் போட்டியிட வேண்டும் என்று அன்புக் கோரிக்கை வைத்தார்கள். நான் அவர்களிடம் நம் கிராமத்தை முன்னேற்ற வேண்டுமென்றால் வார்டு உறுப்பினர்கள் அனைவரையும் பெண்களாக போட்டியிட வைக்க வேண்டுமென்றும், கிராமத்தை இந்தியாவிலேயே முன்மாதிரியாக மாற்ற எல்லோரும் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்ற  இரண்டுக் கோரிக்கைகளை வைத்து, இதற்கு சம்மதித்தால் தான், நான் தேர்தலில் நிற்பேன் என்று கூறினேன். இதைக் கேட்டக் கிராம மக்களும் மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துக் கொண்டனர். தலித் மக்கள் வாழும் பகுதியில் 5 வார்டுகளும், முதலியார்கள் பகுதியில் 3 வார்டுகளும், வன்னியர், பிள்ளைமார்  இருக்கும் பகுதிகளில் 1 வார்டும் உள்ளது. இந்த வார்டுகளில் இருந்து ஆளுமைத் திறன் கொண்டப் பெண்களாகப் பார்த்து மக்களே தேர்ந்தெடுத்தனர். இதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை, மாறாக, வரவேற்றார்கள். பின்னர் உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து மக்களின் முன் சாதி, மதம் பார்க்காமல் கிராமத்தின் முன்னேற்றத்திற்கும், மக்களின் நலனிற்கும் பாடுபடுவோம் என்று உறுதி எடுத்துக் கொண்டு, ஒரு  நல்ல நாளில் காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தோம். எங்களுக்கு எதிராக யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பதால் அனைவரும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பட்டோம் என்று சொல்லும் ஊராட்சிமன்றத் தலைவி சுதா மணிரத்தனம் "ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் வாய்ப்புகள் அதிகமாக குவிந்துக் கிடக்கிறது. அதை வரவேற்க தகுதி இருந்தும் ஒதுக்கிவிடும் பெண்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது என்றும் வருத்தமான குரலில் சொன்னார்.

"
கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்குத் தேவையான குடித்தண்ணீர், மருத்துவ வசதி, சாலை மற்றும் தெருவிளக்கு வசதி என்று சொல்லிக் கொள்ளும்படி எதையும் செய்து தரவில்லை. கிராமத்தின் நிலை மோசமாக இருந்ததால், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மக்கள் எங்கள் கிராமத்தைப் பற்றி கேலியாகப் பேசி சிரிப்பார்கள். இதனால், பெருத்த அவமானம் அடைந்த நாங்கள், உள்ளாட்சித் தேர்தல் நெருங்கியதைத் தொடந்து 6 மாதத்திற்கு முன்னரே, ஊரில் உள்ள அனைத்து சாதி மக்களையும் சிவன் கோவில் அருகே, ஒன்றுத் திரட்டி கிராமத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டினோம். அரசியல் கட்சிகளை சார்ந்து போட்டியிட்டால், வெற்றிப் பெற்றக்  கட்சிக்காரர்கள் மட்டுமே அதிக பலனை அனுபவிப்பார்கள் என்று சுயேட்ச்சைகளாக நிறுத்த முடிவு செய்தோம். ஒருத் தலைமை, ஒரே சொல், ஜாதி, மதம் இல்லாமல் ஒரேக் கட்டுப்பாட்டின் கீழ் அனைவரும் இருக்கவேண்டுமென்று சபதம் எடுத்தோம். பின்னர் யாரை ஊராட்சி மன்றத் தலைவியாக நிறுத்தலாம் என்று எங்களுக்கு கேள்வி எழுந்தப்போது அனைவரின் கண் முன்னும் வந்தவர், எங்களின் தற்போதைய ஊராட்சி மன்றத் தலைவி சுதா மணிரத்னம் தான். ஏனென்றால் அவர் எம்., பி.எட் படித்தவர். ஊரில் அதிகப் படிப்புப் படித்த பெண்மணி என்ற சிறப்பும் அவருக்கு உண்டு. அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பல ஆண்டுகள் பணியாற்றி விட்டு, சமூக சேவை செய்வதற்காக தன்னுடைய வேலையை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து வி.ஆர்.எஸ் வாங்கிவிட்டார். பின்னர் ஊரில்  உள்ள ஏழை  மாணவர்களுக்கு இலவசமாக டியூசன் எடுத்தும், 10 ம் வகுப்பு, 12 ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் எடுப்பவகளை ஊக்கப்படுத்தி கல்வி உதவித் தொகையும் வழங்கி வந்தார். அதுமட்டுமில்லாமல், எந்த சாதியினராக இருந்தாலும், அவர்களது வீட்டில் யாரவது இறந்துவிட்டால் முதல் ஆளாகச் சென்று உறவினர் போல் துக்கம் விசாரிக்கும் அவரது நல்ல குணத்தையும் நாங்கள் அறிவோம். கிராம மக்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் சுதா அம்மாவிடம் தான் செல்வோம். அவரும் முகம் சுளிக்காமல் அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். ஊராட்சிமன்றத் தலைவி முடிவானப் பிறகு, மீதமுள்ள  9 வார்டுகளுக்கு பெண் கவுன்சிலர்களை அனைத்து சாதியிலிருந்தும் தேர்ந்தெடுத்தோம். விவசாயக் கூலிகளான, அவர்கள் அனைவருமே 8 -ம் வகுப்புக்கு மேல் படித்த தன்னம்பிக்கை நிறைந்த மனுஷிகள். களை வெட்டுதல், நடவு வேலை, சித்தாள் வேலை செய்தல் என்று அனைத்து வேலைகளையும் செய்வார்கள். பெண்களாக தேர்ந்தெடுக்கப்பட்டத்தை நினைத்து, கிராம ஆண்கள் பெருமைப்படுக்றோம். இப்பெண்களின் மூலம் கிராமத்திற்கு நல்லது நடக்கும் என்று நம்பிக்கை உள்ளது என்று வார்த்தைகளில் நம்பிக்கைத் தெறிக்க நம்மிடம் பேசினார் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர்"
பெரிதாக்க படத்தின் மேல் சொடுக்கவும்
"தீபா, முத்துலட்சுமி, லட்சிய வீரமணி, அஞ்சலை தேவி, கண்ணகி, ராதா, தமிழரசி, வேம்பு, விசாலாட்சி ஆகிய 9 பேரும் கவுன்சிலர் உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளோம். எங்கள் மேல் நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் அனைவரும் பெண் என்பதால், பணி செய்ய எவ்விதப் பிரச்சனையும் இருக்காது. ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுத்து மக்கள் பணி செய்வோம். இந்த ஊரில் மக்கள் பிரச்சனை என்ற சொல்லுக்கே இடம் அளிக்காத வகையில், சிறப்பாக பணி செய்து, தமிழகத்திலேயே சிறந்த ஊராட்சியாக எங்கள் கிராமத்தை மாற்றிக் காட்டுவோம். இதற்காக, அரசு புறம்போக்கு இடத்தை முறையாக பயன்படுத்துதல், கூரையில்லா வீடு, வீடுகளுக்கு கழிப்பறை வசதி, இளைஞர்களுக்கு விளையாடவும், உடற்ப்பயிற்சி செய்யவும் மைதானம் அமைத்தல், மருத்துவமனையை ஒழுங்குப்படுத்துதல், ஊரில் உள்ள 10 ,12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தி தனி வகுப்பு எடுத்தல், மின்சாரம், குடிநீர் தேவை, சாலை வசதிகள் நிறைவேற்றுதல், கிராமத்திலேயே வேலை வாய்ப்புக்களை உருவாக்கி அனைவரையும் சுயமாக சம்பாதிக்க வைத்து பொருளாதாரத்தில் முன்னேற்ற வைப்போம் என்ற வாக்குறுதிகளை கொடுத்துள்ளோம். நிச்சயமாக வாக்குறுதிகள் அனைத்தையும் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு நிறைவேற்றுவோம். நாங்கள் அனைவரும் பெண்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டதால், அருகில் உள்ள மற்றக் கிராமத்தினர், எங்களைப் பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்து பாராட்டுவதைப் பார்க்கும்போது பெருமையாக உள்ளது. எங்களைப் போல் மற்றக் கிராமத்தினரும் பின்ப்பற்றி, பெண்களுக்கு வாய்ப்பு அளித்தால் நிச்சயம் சாதித்துக் காட்டுவார்கள் என்று உறுதியானக் குரலில் நம்மிடம் பேசினார் வார்டு உறுப்பினர் தமிழரசி.
பெரிதாக்க படத்தின் மேல் சொடுக்கவும்
 ஆண்கள் செய்யும் வேலைகளை பெண்கள் பங்குப் போட்டுக் கொண்டதால் வருமானம் பெருகியதோ இல்லையோ, பல புதிய வாய்ப்புகள் மட்டும் பெருகியது மட்டும் நிஜம். அதற்கு சாட்சியாக வாழ்கிறார்கள் நாட்டார் மங்கலம் கிராம பெண்கள்.
 

அன்புடன்,
பூ. சர்பனா.