27 மார்ச், 2012

எங்கெங்கு காணினும் சக்தியடா... சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் தளிஞ்சி கிராமம்


செல்வதற்குப் பாதையில்லாத மலைவாழ் கிராமம் ஒன்றில் முழுக்க முழுக்க சோலார் பவரில் மின்சாரம் தயாரித்துக் கொள்கிறார்கள். தவிர, சாண எரிவாயுவிலிருந்தும் மின்சாரம் தயாரிக்கிறார்கள்.

கிட்டதட்ட எழுபது  டிகிரி கோணத்தில் பச்சை பசேல் என்று நெகுநெகுவென்று வளர்ந்து கம்பீரமாக வரவேற்கிறது மூணார் மலை. நமது பயணம் அங்குள்ள தளிஞ்சி என்கிற மலைவாழ் மக்கள் கிராமத்துக்கு. அங்கு என்னதான் சிறப்பு?

இந்தக் கிராமத்துக்கு மின்சாரம் கிடைப்பது முழுக்க முழுக்க சோலார் சக்தியில்தான். இது தவிர, சாண எரிவாயுவில் இருந்தும் இவர்கள் மின்சாரம் தயாரித்துக் கொள்கிறார்கள். இதைக் கேள்விப்பட்டதும் அட என்று வியந்தோம்.  
இந்தக் கிராமம் வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால், வனத்துறை அதிகாரியிடம் அனுமதி பெற்றோம். வழியில்,யானைகள் தாக்கும் அபாயம் இருந்ததால் அவரே இரண்டு பாதுகாவலர்களை நம்முடன் அனுப்பி வைத்தார். மலையில் பல்வேறு வன விலங்குகள் வாழ்வதால் வாகனங்களுக்கு முற்றிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் நடைராஜா பயணம்தான்.



திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையில் இருந்து, மூணார் செல்லும் பேருந்தில் பயணித்தால்  22  கிலோ மீட்டர் தொலைவில் வருகிறது கேரளாவின் சம்பக்காடு. அங்கு இறங்கிக் கொண்டு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாக கரடு முரடான பாதையில் 7 கிலோ மீட்டர் நடைபயணம்.   5  நிமிடம்தான் நடந்திருப்போம். சலசலவென்று வாயாடிக் கொண்டு குளிர்ச்சியாக நதி ஒன்று குறுக்கிடுகிறது. கண்களால் நதியில் நனைந்தவாறே பாலத்தில் ஏறி நதியைக் கடந்தோம். அதன்பிறகு பாதையே கிடையாது.  

அடர்ந்த மரங்கள் பிரம்மாண்ட கூடாரமாய் விரிந்து பகலில் ஓர் இரவாய் மயக்கம் காட்டிக் கொண்டிருந்தனஅடர்ந்த மரக்கிளைகளுக்கிடையே தனது கதிர்களை நுழைக்கப் போராடிக் கொண்டிருந்தது சூரியன். ஆனால், பாவம், அதற்குத் தோல்விதான். வழியில் தலையிலும் முதுகிலும் பெரிய,பெரிய மூட்டைகளை சுமந்து கொண்டு ஆண்களும், பெணகளும் மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள்.சிறிது தூரம் நடந்திருப்போம். ‘உய்ங்ங்...’ என்று ஒரு ரீங்காரம். இது வரை நாம் பார்த்திராத ஒரு தினுசான கொஞ்சம் பெரிய சைஸ் வண்டு. நடுங்கி அப்படியே நின்றோம். நம்மைச் சுற்றிப் பறந்து சிறிது நேரம் சங்கீதக் கச்சேரி நடத்திய அந்த வண்டு பிறகு, வேறெங்கோ பறந்தது. தொடர்ந்து நடக்கத் தொடகினோம். வழியில்  மேலும் பலவித வண்டுகள், விநோதப் பூச்சிகள் நடுநடுவே திடீரென்று குறுக்கிட்டு திகிலூட்டின.   7 கிலோ மீட்டர் நடைபயணத்துக்குப் பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆஸ்பெஸ்டாஸ் ஓட்டு வீடுகள் தென்பட்டனஒரு வீட்டுக்குள் நுழைந்தபோது, கும்பலாக உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு செய்தி சேனல். ‘அட’  

அங்கிருந்த மல்லிகா என்கிற பெண் நம்மிடம் பேசத் தொடங்கினார்.,  "200 வருஷங்களுக்கு முன்னாடிலேர்ந்தே பரம்பரை  பரம்பரையா இந்தக் கிராமத்தில் இருக்கோம். ஃபாரஸ்ட்  அதிகாரிங்க, எங்க கிராம மக்களுக்குன்னு 800 ஏக்கர் நிலம் ஒதுக்கி இருக்காங்க, அதுலதான் 150 குடும்பங்கள் வாழ்ந்துக்கிட்டிருக்கோம். வீடு கட்டுன இடம் போக மீதி இடத்துல மலையை  சரிசெய்து அதில் பீன்ஸ், காய்கறிகள், நெல் பயிரிட்டு விவசாயம் செய்றோம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்தமாக 4 ஏக்கர் வரை நிலம் உள்ளது” என்று சொல்லிக் கொண்டே வந்தவரிடம் சோலார் மின்சாரம் பற்றிக் கேட்டோம். உற்சாகமாக் கூறத் தொடங்கினார் 

காலங்காலமா எங்க கிராமம் இருளில்தான் மூழ்கிக் கிடந்தது. எல்லா வீடுகளிலும் மண்ணெண்ணெய் விளக்குத்தான். பிள்ளைகளும் அந்த வெளிச்சத்தில்தான் ரொம்ப  சிரமத்தோடு படிப்பார்கள்ஊரில் ரேஷன் கடை இல்லாததால் 7 கிமீ தொலைவில் உள்ள சின்னார் பஞ்சாயத்தில் போய் மண்ணெண்ணெய் வாங்கி வருவோம், அதுவும் கொஞ்ச நாளில் தீர்ந்துடும். அந்த மாதிரி நேரங்கள்ல  வாசல்ல தீ மூட்டி பிள்ளைகளைப்  படிக்க வைப்போம்அரசு அதிகாரிகளிடம், எங்கள் குறையைச் சொல்லி  பலமுறை மின்சார வசதி செய்துத் தரச் சொல்லிக் கேட்டோம். இங்கு  பல அரிய வகை உயிரினங்கள் வசிப்பதால்,அவைகளுக்கு பாதிப்பு ஏற்ப்படும் என்று மின்சார வசதி செய்து தரலை. இந்த நிலையில் கடந்த 2005ம் ஆண்டு அரசு அதிகாரிகள் எங்கள் கிராமத்தைப் பார்வையிட்டு, சூரிய ஒளியில் இயங்கும் சோலார் விளக்குகளைப் பொருத்துவதாக வாக்குறுதி அளித்தார்கள். அதன்படியே ஒவ்வொரு வீட்டிற்கும் சோலார் விளக்குகளை அமைத்துக் கொடுத்தனர்” என்றார்


அடுத்து கிராமத்தின் மூப்பர் (ஊர்த் தலைவர்) ராஜனைச் சந்தித்தோம். "நாங்கள் டவுனுக்குச் செல்லணும்னா 7 கிலோ மீட்டர் கரடு, முரடான வழியில்தான் செல்லணும்வெளி ஆட்கள் இங்கு வந்தால் வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் என்று, அரசு பாதை அமைக்கலை. நாங்களாவது பரவாயில்லை. மஞ்சம்பட்டி, புதுவயல், மூதுவார்குடி, மூங்கில் பள்ளம் போன்ற கிராமங்கள் 13 கிமீ தொலைவில் உள்ளன. இங்கு வாழும் மக்களும்  நடந்து வந்து, எங்கள் கிராமத்தை தாண்டிதான் டவுனுக்குச் செல்வார்கள். காலை 10 மணிக்குமேல் வெளியில் சென்று மாலை 5 மணிக்குள் வீடு திரும்பி விடுவோம். ஏனென்றால் போகும் வழியில் யானைகள் எப்போ  வேணாலும் குறுக்கே வரும். ஒருமுறை எங்கள் ஊரைச் சேர்ந்த காளியாத்தாள் என்ற பெண் விறகு பொறுக்கச் செல்லும்போது யானை மிதித்து இறந்துவிட்டார். அதிலேர்ந்து ரொம்ப ஜாக்கிரதையா இருக்கோம். எங்கள் மூதாதையர்கள் காலத்திலிருந்தே,இன்றுவரை கைக்குத்தல் அரிசிச் சோறுதான் சாப்பிடுகிறோம். அதனால் உடம்புக்கு முடியலைன்னு படுத்தில்லை...” என்கிறார் பெருமையுடன். பின்னர் அவர் நம்மை டீ சாப்பிடும்படி அன்பு வேண்டுகோள் வைத்தார். டீ வந்தது. மூலிகை கலந்த கக்கன் டீ. தாவர வாசனையும் சூப்பர் டேஸ்ட்
மேல் நாவில் டீயின் சுவை மிதந்திருக்க அங்கிருந்து நகர்ந்தோம். கர்னாத்தா என்பவரின் வீட்டுக்குப் போனோம். அவர் நம்மிடம் பேசத் தொடங்கினார். "எங்கள் கிராமத்துக்கு 2001 -ம் ஆண்டுதான்   பள்ளிக்கூடம் வந்ததுஇங்குள்ள பள்ளியில் 5 ம் வகுப்பு வரை மட்டுமே உள்ளதால், குழந்தைகள் மேற்படிப்பை உடுமலையில் உள்ள பள்ளியில் ஹாஸ்டலில்  படித்து வருகிறார்கள். நாங்கள்தான் படிக்கலை. எங்கள் குழந்தைகளாவது படிக்கட்டுமே என்ற வைராக்கியத்தோடு படிக்க வைக்கிறோம். முன்பெல்லாம் இரவில் சரியாக வெளிச்சம் இல்லாததால் குழந்தைகள் படிக்கச் சிரமமாக இருக்கும். மின் வெளிச்சமே அறியாத எங்கள் ஊரில், சோலார் விளக்குகள் அமைந்ததால், தற்போது குழந்தைகள் மின் வெளிச்சத்தில் ஆர்வமாக அதிக நேரம்  படிப்பதைப் பார்க்கும்போது மனதிற்கு சந்தோஷமா இருக்கு.  

எங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க எங்களுடனேயே தங்கி கல்வி சொல்லித்தரும் ஆசிரியர் மணி அவர்களுக்கு, எங்கள் கிராமமே கடமைப்பட்டுள்ளது. வாரம் 5 நாட்களும் இங்கேயே தங்கி பாடம் நடத்திட்டு, வார இறுதியில் ஒருமுறை மட்டுமே அவரது வீட்டிற்குச் செல்லும் மணி சார் எங்களுக்குக் கிடைத்த தெய்வமாக நினைக்கிறோம். இங்குள்ள ஆற்றுத் தண்ணீரில் சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை வைத்து  பைப் மூலம் தண்ணீர் எடுத்து நீரை சுத்திகரித்துக் குடிக்கிறோம். ஒவ்வொரு வீட்டிற்கு 2 பல்ப்பும், அனைத்து தெருவிற்கும் விளக்குகளும் அமைத்துக் கொடுத்துள்ளனர்



சூரிய வெளிச்சம் இருக்கும்போது மட்டும்தான், மின்சாரம் கிடைக்கும். இது காட்டுப் பகுதியாக இருப்பதால் இங்கு அடிக்கடி மழை பெய்யும். அப்பொழுதெல்லாம் மின்சாரம் இல்லாமல் இருட்டில்தான் பொழுதைக் கழிப்போம். இதனால் சூரிய வெளிச்சம் கிடைக்காத காலத்தில் நாங்கள் வளர்த்துவரும் ஆடு, மாடுகளிலிருந்து கிடைக்கும் சாணத்திலிருந்து, சாண எரிவாயு மூலமாகவும் மின்சாரம் தயாரிக்கிறோம். தற்போது முழுமையாக எங்களுக்கு மின்சாரம் கிடைக்கிறது”  என்று சொல்லிக் கொண்டே நம்மிடம் வீட்டில் உள்ள விளக்கைப் போட்டு  காட்டினார்  கர்னாத்தா. மதிய சாப்பாட்டை அங்கேயே முடித்துக் கொண்டோம். கேழ்வரகு கூழும், ,பெயர் தெரியாத விதவிதமான பழங்களையும் சாப்பிட கொடுத்தார்கள். வாழ்க்கையில் இதற்கு முன் அப்படி ஒரு சுவையான உணவை உண்டதில்லை என்று உறுதியாகக் கூறலாம்இங்குள்ள அனைவரின் வீடுகளிலும் டிவியும், டிடிஹெச் ஆண்டனாவும் உள்ளது. தவிர, விவசாயம் செய்யும் நிலங்களில் அடிக்கடி பன்றிகளும், யானைகளும் வந்து அட்டகாசம் செய்வதால், நிலங்களைச் சுற்றி சோலார் சக்தி மூலம் மின் வேலிகள் அமைத்துள்ளார்கள்.. அதேபோல்  கிராமத்தின் பாதுகாப்புக்காகவும் ,ஊரைச் சுற்றிலும் மின் வேலிகள் அமைத்துள்ளார்கள். நகரத்து வாசனையே படாத இந்தக் கிராமத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், திருமணத்தின்போது குண்டுமணி அளவு கூட தங்கமோ, வரதட்சணையோ ஆண்கள் வாங்குவதில்லை. தவிர திருமணத்தின் அனைத்துச் செலவுகளையும் மாப்பிள்ளை வீட்டாரேஏற்றுக் கொள்கிறார்கள்.  

மக்கள் இங்கு குடியிருப்பது வன விலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், இவர்களை பல முறை அரசு அதிகாரிகள் நேரில் சென்று, “ஒரு குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் தருகிறோம். நகரத்திற்குச் சென்றுவிடுங்கள்” என்று கூறியும்,இயற்கை வாழ்க்கையை இவர்கள் நேசிப்பதால் டவுனுக்குச் சென்று குடியேற மாட்டோம் என்று மறுத்துவிட்டார்கள். இவர்களுக்கு வெளியூரில் சொந்த பந்தங்கள் என்று யாரும் இல்லை. இதே ஊரிலேயே பெண் எடுத்து, பெண் கொடுத்துக் கொள்கிறார்கள். மேலும்  6 குதிரைகளை தங்கள் பயன்பாட்டுக்காக வைத்துள்ளனர்

"
மின் விளக்குகள் இல்லாததால், முன்பெல்லாம் விஷப் பாம்புகள் கடித்து எங்கள் ஊரில் பல பேர் இறந்துள்ளனர். தற்போது விளக்குகள் எரிவதால் அந்த நிலை மாறியுள்ளதுஎங்கள் ஊரில் பலர் செல்போன் வைத்துள்ளார்கள். இங்குள்ள காடுகளில் விலையும் ஈச்சம் புற்களை அறுத்துக் கொண்டுவந்து காய வைத்துதுடைப்பம் செய்து, டவுனுக்குச் சென்று விற்கிறோம். இதில் தான் எங்களுக்கு அதிக வருமானமே கிடைக்கிறது. கிராமத்தினர் அனைவருக்கும் ஒரே ஒரு வருத்தம்தான். இங்கு மருத்துவமனை கிடையாது. அதனால் பெண்களின் கர்ப்பக் காலத்தில் பிரசவ வலியின்போது,எந்த நேரமாக இருந்தாலும் தொட்டில் கட்டி,நான்கு பேராக தூக்கிக் கொண்டு ஓடுவோம். 7 கிலோ மீட்டர் நடந்து சென்று பஸ்சைப் பிடித்து மருத்துவமனை செல்வதற்குள் பல பெண்கள் வலியால் சிகிச்சை கிடைக்காமல் இறந்திருக்கிறார்கள்” என்று வருத்தமுடன் சொல்கிறார் மாதவன் என்ற முதியவர்





மாலை நெருங்கிக் கொண்டிருந்தது. இப்போதே கிளம்பினால்தான் பாதுகாப்பாகச் செல்ல முடியும் என்று உடன் வந்த பாதுகாவலர்கள் கூற, கிளம்பத் தயாரானோம். அப்பொழுது ஒரு சிறுமி ஓடி வந்து ஆசையுடன் எதையோ கொடுத்தாள். வாங்கிப் பார்த்தோம். மலையில் பறித்த நாவற்பழங்கள்- கன்னங்கரேல் நிறத்தில். அவளுக்கு ஒரு ‘உம்மா’ கொடுத்துவிட்டு நாவல் பழங்களை தின்றவாறே, இறங்க மனமின்றி மலையிலிருந்து இறங்கத் தொடங்கினோம்
அன்புடன்
சர்பனா

13 கருத்துகள்:

  1. சர்ப்னா நல்ல கட்டுரை. உண்மையிலேயே அவர்கள் கொடுத்துவைத்தவர்கள். அவர்களுக்கு மருத்துவம், கல்வி மட்டும் இருந்தால் இன்னும் பயனடைவார்கள். மருத்துவர்கள் கிராமத்திற்கு சென்று பணிபுரியவே கஷ்டபடுகிறார்கள். இங்கு எப்படி பணிபுரிவார்கள். அங்குள்ள பிள்ளைகளில் ஒருவர் மருத்துவம் படித்து அங்கு பணியாற்றினால் அங்குள்ள மக்கள் பயன்பெறுவார்கள். அடுத்தமுறை நீங்கள் மலைவாழ் மக்களை பேட்டி எடுக்க சென்றால் அவர்களின் குழந்தைகளுக்கு நோட் புக், பேனா போன்றவைகளை வாங்கி செல்லவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு கிராமங்களின் இன்றைய நிலை ஏன் தமிழ் நாட்டின் நிலையும் கூட எல்லோரும் சூரிய ஒளிக்கு மாறும் சரியான நேரமும் இதுவே

    பதிலளிநீக்கு
  4. அந்த மலை கிராமத்தை சேர்ந்த plus 2 வரை படித்த ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ,அவர்கள் வாங்கி இருக்கும் மதிப்பெண்ணை பொறுத்து, சலுகை செய்து கொடுத்து , ஒரு மருத்த்துவ seat கொடுத்து , அவர் அங்குதான் மருத்துவராக
    அரசு ஊழியராக பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனை விதித்து (atleast for a period of minimum 10 years அல்லது இன்னொரு மருத்துவர் அங்கிருந்தே உருவாகும் வரை) அரசாங்கம் ஏதாவது செய்தால் அங்குள்ளவர்களும் நிச்சயம் மருத்துவ உதவி கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  5. You had made a great awareness by bringing out this lightning message to the outer world......Great service Vini. Keep going.....

    பதிலளிநீக்கு
  6. அந்த அழகிய கிராமம் குறித்து நீங்கள் விவரித்த விதத்திலிருந்தே.. எனக்கு அங்கே போய் வந்த திருப்தி ஏற்பட்டுள்ளது.இத்தகைய சூரிய ஒளி மின்சாரப் பயன்பாட்டை நாடு முழுவதும் விரிவு படுத்தினால்.. மாணவர்கள்,உழைப்பாளிகள் வாழ்வில் நல்லதொரு "வெளிச்சம்"ஏற்படும்.

    பதிலளிநீக்கு
  7. // அடர்ந்த மரங்கள் பிரம்மாண்ட கூடாரமாய் விரிந்து பகலில் ஓர் இரவாய் மயக்கம் காட்டிக் கொண்டிருந்தன. அடர்ந்த மரக்கிளைகளுக்கிடையே தனது கதிர்களை நுழைக்கப் போராடிக் கொண்டிருந்தது சூரியன். ஆனால், பாவம், அதற்குத் தோல்விதான். //

    பேஸ்புக் மூலமா உங்க வலைபக்கத்தை பார்த்தேன். படிக்கலாம்ன்னு எடுத்தேன்.அந்த காட்டுக்குள்ள முகம் காட்ட வந்த சூரியனை உருவக படுத்திருக்கும் விதம் நல்லா இருக்கு. அதுக்கு மேல படிக்கல... பத்தாங்கிளாஸ் எக்ஸாம் பேப்பர் மாதிரி இவ்ளோ நீளமா எழுதி இருக்கீங்க. இந்த கட்டுரையை கடைசி வரியை பார்ப்பதற்காக்க ஸ்க்ரோல் பண்ணவே பத்து நிமிஷம் ஆயுடுச்சு. நம்ம பேசிக்கலி சோம்பேறி. அதான் கமென்ட் மட்டும் பண்ணிட்டு கிளம்பிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. பசுமையான அனுபவங்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. அருமையான பதிவு. You can visit Solar Power India https://www.facebook.com/groups/388347794570992/ For many links on Solar. My FB Kanaga Gnana - https://www.facebook.com/kanaga.gnana also has many details on Solar energy

    பதிலளிநீக்கு
  10. really interesting and useful article. am proud to know that you are also a talented youth who think about this society.

    பதிலளிநீக்கு